2016-ம் ஆண்டில் பாமக தனித்து ஆட்சி அமைக்கும் : ராமதாஸ்
போளூர்: தமிழகத்தில் 2016ம் ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பாமக வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கூறினார். உள்ளாட்சி தேர்தலையொட்டி போளூர் தொகுதி பாமக வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: உள்ளாட்சி தேர்தலில் பாமக வேட்பாளர்களுக்கு வாக்களித்து வாய்ப்பு தாருங்கள். திராவிட கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. ஆனால் பாமக மற்ற கட்சிகளை காட்டிலும் உயரிய கொள்கை உடையது.
இதுவரை திராவிட கட்சிகளை மாறிமாறி பாமக ஆதரித்து வந்தது. இனி எந்த திராவிட கட்சியையும் ஆதரிக்காது. எதிர்காலத்தில் பாமக ஆளுங்கட்சி அந்தஸ்து பெறும். தற்போதுள்ள காலக்கட்டத்தில் விவசாயம் நலிவடைந்து நிலங்களை மனை போட்டு விற்கும் நிலை வந்துவிட்டது. கிராமப்புறவாசிகள் நகரங்களுக்கு குடியேறுகின்றனர். நகரமயமாதலால் எவ்வித வளர்ச்சியும் கிடைக்கப்போவதில்லை.
வாக்குகளை பணம் கொடுத்து வாங்கும் கலாசாரம் பெருகிவிட்டது. வரும் 2016ம் ஆண்டு பாமக தனித்து ஆட்சி அமைக்கும். அப்போது தமிழகத்தில் ஒரு துளி சாராயம் கூட கிடைக்காது. இவ்வாறு ராமதாஸ் பேசினார்.