புழல்: பொய் வழக்குகளால் திமுக சோர்ந்துவிடாது. உள்ளாட்சி தேர்தலில் அமோக வெற்றி பெறும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது. இவரை போலீசார் கடந்த வாரம் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இன்று காலை 10.20 மணியளவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், டி.கே.எஸ்.இளங்கோவன், எம்.பி., திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் சுதர்சனம் ஆகியோர் புழல் சிறைக்கு வந்து கே.பி.பி.சாமியை சந்தித்து பேசினர். பின்னர் 10.40 மணிக்கு வெளியே வந்தனர்.
சிறை வாசலில் நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் பாமக, மதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சர்வாதிகார போக்கை இந்த அரசு கடைபிடித்து வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைப்பதால் நாங்கள் சோர்ந்து விட மாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். மாநில தேர்தல் கமிஷன் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு மு.க. ஸ்டாலின் கூறினார்.
முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமி, ஆவடி நகராட்சி தலைவர் வேட்பாளர் சா.மு.நாசர், துரை சாமி, நாராயணன், திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் ஏராளமான திமுகவினர் புழல் சிறை வாசலில் ஸ்டாலினை வரவேற்றனர். ஸ்டாலினுடன் செல்ல முன்னாள் எம்.பி., கிருஷ்ணசாமியை சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. போலீசாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. புழல் இன்ஸ்பெக்டர் கணேசன் கட்சியினரை சமாதானம் செய்தார். சிறைத்துறை அதிகாரிகளுடன் பேசி அவர்கள் உத்தரவின்பேரில் கிருஷ்ணசாமி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook