ஹசாரேவுக்கு முழு ஆதரவு : ஆர்எஸ்எஸ் தலைவர் பேச்சு!
நாக்பூர்: ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆரம்பம் முதலே ஆர்எஸ்எஸ் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் அளித்து வந்ததாக அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிராக கடுமையான லோக்பால் மசோதா வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். 13 நாட்கள் நடந்த இந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு நாடு முழுவதும் பெரும் ஆதரவு பெருகியது. இதேபோல் கடந்த மார்ச் மாதம் டெல்லி ஜந்தர்மந்தரில் அன்னா நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கும் பெரும் ஆதரவு கிடைத்தது.
அன்னாவின் போராட்டத்தை ஆர்எஸ்எஸ் போன்ற சங்பரிவார் அமைப்புகள் இயக்கி வருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் குற்றம் சாட்டினார். இதை அன்னா ஹசாரே கடுமையாக மறுத்தார். ‘திக் விஜய்சிங்குக்கு மூளை கெட்டுவிட்டது. அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்’ என்றார். இந்நிலையில், அன்னாவின் போராட்டத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆரம்பம் முதலே ஆதரவு அளித்து வந்ததாக அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாக்பூரில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:
அன்னாவின் போராட்டங்களில் நாம் தீவிரமாக பங்கெடுத்தோம். தேசத்தின் நலன் கருதி குறிப்பாக மக்களின் நலன் கருதி இதுபோன்ற போராட்டங்களுக்கு நமது ஆதரவை தெரிவித்து வருகிறோம். அன்னா போராட்டத்தில் வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜே கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மலிவான விளம்பரத்துக்காக அவர்கள் இவ்வாறு பேசுகிறார்கள். அவர்களை நாம் ஒருபோதும் சகித்துக் கொள்ளக்கூடாது. அன்னாவின் போராட்டம் இன்னும் முழு வெற்றி அடையவில்லை.