அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள் : நடிகை குஷ்பு
திருச்சி: திருச்சி மேற்கு சட்டசபை தொகுதியில் வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக வேட்பாளர் கே.என்.நேரு மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் நேற்று நடிகை குஷ்பு பிரசாரம் செய்தார். புத்தூர் வண்ணாரப்பேட்டை, உறையூர், புத்தூர் விஎன்பி தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரசாரம் செய்து அவர் பேசியதாவது: நரேந்திரமோடி குஜராத்தில் உண்ணாவிரதம் இருந்ததும் தமிழக அமைச்சர்களை உடனே அனுப்பிய ஜெயலலிதா, பரமக்குடியில் துப்பாக்கி சூடு நடந்தபோது பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவு கூறவும், காயமடைந்தவர்ளை சென்று பார்க்கவும் அமைச்சர்களை தாமதமாக அனுப்பினார்.
தோல்வி பயத்தால் திருச்சியில் அதிமுக அமைச்சர் பட்டாளம் முற்றுகையிட்டுள்ளது. 5 மாதத்தில் அதிமுக ஆட்சியில் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுவிட்டது. பொய் வழக்கில் திமுகவினரை சிறையில் அடைக்கின்றனர். அதிமுக நிர்வாகிகள் வீடுகளிலேயே திருட்டு நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் 700 கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. விலைவாசி ஏற்றம், மின்வெட்டு அதிகரித்து வருகின்றன. எனவே நேருவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்து அதிமுகவுக்கு பாடம் புகட்டுங்கள். இவ்வாறு குஷ்பு பேசினார்.