மணல் கொள்ளை தொடர்கிறது : கரூரில் விஜயகாந்த் பிரசாரம்!
கரூர்: அதிமுக ஆட்சியிலும் மணல் கொள்ளை நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று கரூரில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்த் கூறினார். கரூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ராமநாதன் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கரூர் 80 அடி ரோட்டில் நேற்று இரவு நடந்த கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: கரூர் நகராட்சி பகுதியில் ஓடும் இரட்டை வாய்க்கால் மூலம் கொசுகள்தான் உற்பத்தியாகின்றன. அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் சாக்கடை நீர்தான் ஓடுகிறது.
இப்போதும் மணல் கொள்ளை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 40 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் கட்சி, 100 ஆண்டுகள் அரசியலில் இருக்கும் கட்சிகள் தேர்தலில் வாக்கு கேட்டு வருகின்றனர். அவர்கள் இதுவரை என்ன செய்துள்ளார்கள். அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். தேமுதிகவினர் லஞ்சம், கமிஷன் வாங்கினால், ஊழல் செய்தால் சும்மா விடமாட்டேன்.
தேமுதிகவினருக்கு பொறுப்புகளை அளியுங்கள். அவர்கள் அடிப்படை வசதிகளை செய்து தருவார்கள். நன்றி மறவா மனம் கொண்டவர்கள் நாங்கள். இதுதான் எங்கள் மூலதனம். வாக்களித்தவர்களுக்கே திரும்ப, திரும்ப வாக்களிக்காதீர்கள். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.