சின்னம் பொறித்த மோதிரம் கட்சி முகவர்களுக்கு தடை!
பேரணாம்பட்டு: வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் போது சின்னங்கள் பொறித்த மோதிரம் அணிய முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலின்போது வாக்குசாவடி மையங்களில் அங்கீரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களை சார்ந்த முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குசாவடிகளில் பணியாற்றும் முகவர்கள், தங்களது வேட்பாளர்களின் பெயர் மற்றும் வேட்பாளரின் சின்னம் அடங்கிய எதையும் வாக்குச்சாவடி மையத்துக்கு எடுத்து வரக்கூடாது. வாக்காளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ (சைகை மூலமாக) எந்த ஒரு சின்னத்திலும் வாக்களிக்க தூண்டக்கூடாது. கட்சிகளின் சின்னங்களை பொறித்த மோதிரங்கள் அணிந்து வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.