சான் பிரான்சிஸ்கோ: கம்ப்யூட்டர் உலகில் மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவன தலைவர் ஸ்டீவன் பால்ஜாப்ஸ் புற்றுநோயால் பரிதாபமாக இறந்தார். அவருக்கு வயது 56. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கடந்த 1955ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பிறந்தவர் ஸ்டீவன் பால் ஜாப்ஸ். கல்லூரியில் பொலிடிக்கல் சயின்ஸ் படிக்கும்போதே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார். பின்னர் பல்கலைக்கழக பேராசிரியராக சேர்ந்தார். எனினும், எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
அதன்பின் வேலையை உதறிவிட்டு, பள்ளி நண்பர் ஸ்டீவன் வோஸ்னியாக் என்பவருடன் சேர்ந்த கடந்த 1976ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனத்தை தொடங்கினார். அதன் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார். கம்ப்யூட்டர் உலகில் மிகச் சிறந்த கம்ப்யூட்டர் நிபுணர்களை ஊக்கப்படுத்தி, பல புதிய பொருட்களை உலகுக்கு அறிமுகப்படுத்தினார். வீட்டிலும், அலுவலகத்திலும் எளிதில் பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர்கள், ஐபாட், ஐபேட், ஐபோன் போன்ற பல நவீன பொருட்களை உலகுக்கு அறிமுகப்படுத்தி குறைந்த வயதிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரர் ஆனார்.
இவர் கம்ப்யூட்டர் துறை மட்டுமல்லாமல், இசைத் துறையிலும், அனிமேஷன் துறையிலும் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. 1000 பாடல்களை பதிவு செய்து கொள்ளும் வசதியுடன் கடந்த 2001ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஐபாட் இசைப்பிரியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இவரது ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க தொழிற்துறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. எனினும், குறைந்த வயதிலேயே கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டில் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்பிள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை டிம் குக் என்பவரிடம் ஒப்படைத்தார். இதற்கிடையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். இந்நிலையில் கலிபோர்னியா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 56 வயதில் ஸ்டீவன் பால் ஜாப்ஸ் நேற்று காலமானார். கடந்த 2005ம் ஆண்டு ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தில் ஸ்டீவன் பால்ஜாப்ஸ் உருக்கமான உரை நிகழ்த்தினார். அப்போது, நான் விரைவில் மரணம் அடைய போகிறேன். உலக வாழ்க்கையில் தோல்விகள், வெற்றிகள், மன வருத்தங்கள், வசதிகள், வாய்ப்புகள், செல்வாக்கு எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன். இவை எல்லாம் மரணத்தோடு முடிந்துவிடும். ஆனால், மரணத்துக்கு பிறகு என்ன விட்டு செல்கிறேன் என்பது மிகமிக முக்கியம் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook