தெலங்கானாவில் மீண்டும் ரயில் மறியல் போராட்டம்!
சித்தூர்: ஆந்திராவை பிரித்து தெலங்கானா தனி மாநிலம் அமைக்க வலியுறுத்தி கடந்த மாதம் 13ம் தேதி முதல் பல்வேறு தரப்பினர் நடத்தி வரும் போராட்டங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தனி தெலங்கானாவை வலியுறுத்தி, கடந்த மாதம் 2 நாட்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான ரயில்கள் ரத்தாகின. மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளானார்கள். இந்நிலையில் வரும் 9, 10, 11ம் தேதிகளில் மீண்டும் ரயில் மறியல் நடத்தப்படும் என போராட்டக் குழு அறிவித்துள்ளது.
இந்நிலையில், போதிய பாதுகாப்பு அளித்தால் எந்த சூழ்நிலையிலும் ரயில்களை இயக்க தயார் என்று தென் மத்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஐதராபாத்தில் போலீஸ், ரயில்வே உயரதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். இதில் டிஜிபி தினேஷ்ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராணுவம் மற்றும் போலீசார் உதவியுடன் ரயில்களை இயக்குவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே ஐதராபாத்துக்கு கடந்த செவ்வாய்க்கிழமை வந்த 25 சொகுசு பஸ் மற்றும் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக 13 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து ஆந்திர அரசு நேற்றிரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நக்சல்கள் ஊடுருவல்?
கடந்த 20 நாட்களாக அமைதியான முறையில் நடந்து வந்த தெலங்கானா போராட்டத்தில், கடந்த 3 நாட்களாக பஸ் எரிப்பு, பயணிகள் மீது தாக்குதல் போன்ற அராஜக செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே, தெலங்கானா போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவி உள்ளனரா என்ற கோணத்தில் ஆந்திர உளவுத் துறை தீவிரமாக கண்காணித்து வருகிறது.