சென்னை: ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சினைக்கு திமுக குரல் கொடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் தற்போதைய மேயர் மா.சுப்பிரமணியத்தை ஆதரித்து, கொளத்தூர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: கடந்த திமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சி மேயராக இருந்த மா.சுப்பிரமணியன், சென்னை நகரில் சாலை வசதி, குடிநீர் வசதி, போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி மேம்படுத்தியுள்ளார்.
பெரம்பூரில் தடைபட்டிருந்த சென்னையின் மிகப்பெரிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு, அதற்கு முரசொலி மாறன் மேம்பாலம் என பெயரிட்டு கருணாநிதி திறந்து வைத்தார். மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேயர் மா.சுப்பிரமணியன் நிறைவேற்றியுள்ளார். அதுபோன்ற வளர்ச்சி பணிகள் மீண்டும் தொடர அவருக்கு வாக்களிக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்சனைக்கு திமுக குரல் கொடுத்து கொண்டுதான் இருக்கும். மக்கள் நல பணிகளில் அக்கறை காட்டாமல், திமுகவை அழிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அக்கறை காட்டி வருகிறார்.
மும்பை, டெல்லி மாநகரங்கள் போல¢ சென்னையை மேலும் மேம்படுத்த மீண்டும் சுப்பிரமணியத்தை மேயராக தேர்ந்தெடுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார். சென்னையில் நேற்று வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மா.சுப்பிரமணியன் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அதை தொடர்ந்து இன்று காலை நுங்கம்பாக்கம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். பல்வேறு இடங்களில் அவரை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
வாக்குசேகரிப்பின் போது, மா.சுப்பிரமணியன் பேசும்போது, “முன்பிருந்த சென்னையின் சூழலை மாற்றி தற்போதைய நிலைக்கு சென்னையில் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநகராட்சி மூலம் வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகராட்சியின் கல்வி தரம், பொது சுகாதாரம், மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நவீனபடுத்தப்பட்டுள்ளது. இது போன்ற வளர்ச்சி பணிகள் மேலும் தொடர எனக்கு வாக்களித்து வாய்ப்பு தாருங்கள் என்றார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook