தசரா விழா கோலாகலம் : குலசையில் இன்று சூரசம்ஹாரம்!
உடன்குடி: குலசேகரன்பட்டணம் முத்தாரம்மன் கோயில் தசரா விழாவில் இன்று இரவு மகிஷாசூரன் சம்ஹாரம் நடக்கிறது. மைசூருக்கு அடுத்தபடியாக உடன்குடி அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.
விழாவின் முக்கிய நாளான இன்று காலை 10.30 மணிக்கு மகாஅபிஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜைக்கு பின்னர் அம்மன் சிம்மவாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளுகிறார். அங்கு மகிஷாசூர சம்ஹாரம் நடக்கிறது.
இதில், தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கின்றனர். பகல் பல்வேறு வேடமிட்டு வீதிகளில் வலம் வந்தனர். இரவு 1 மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது. விழாவையொட்டி பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.