சோழவரம் ஷூட்டிங்கில் குண்டுவெடிப்பு : உதவி தயாரிப்பாளர்க்கு சிறை!
புழல்: சென்னை அடுத்த சோழவரம் அருகே பழைய எருமைவெட்டிபாளையம் காட்டு பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை தெலுங்கு படத்தின் ஷூட்டிங் நடந்தது. சண்டை காட்சி மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைப்பது, நாட்டு வெடிகுண்டு வீசுவது போன்ற காட்சிகளை படக்குழுவினர் படம் பிடித்தனர். மாலையில் வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளை தொழிலாளர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது 5 குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் 3 தொழிலாளர்கள் பலத்த தீக்காயம் அடைந்தனர்.
அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சோழவரம் எஸ்.ஐ.க்கள் சண்முகம், குமார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்தினர். அனுமதியின்றி ஷூட்டிங் நடத்தியதாகவும், பாதுகாப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடத்தியதாகவும் வழக்கு பதிவு செய்தனர்.
திரைப்பட குழுவில் இருந்த சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையை சேர்ந்த நவீன்ராஜ் (38), காஞ்சிபுரம் மாவட்டம் நெல்லூரை சேர்ந்த ஆனந்த் (38), சென்னை தேனாம்பேட்டை இளங்கோ தெருவை சேர்ந்த ராமன் (46), உதவி மேலாளர் மற்றும் உதவி தயாரிப்பாளர்களான சென்னை சாலிகிராமம் தசரதபுரத்தை சேர்ந்த பாஸ்கர் பாபு (35), பாபு ராவ் (42), ஐதராபாத் விஜய் (40) ஆகிய 6 பேரை கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.