மாநில கவுன்சில் உறுப்பினராக முதல்வர் ஜெயலலிதா சேர்ப்பு!
புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மாநில கவுன்சில் நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார். மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகளில் மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்குவதற்காக பிரதமர் தலைமையில் மாநில கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலில் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச முதல்வர்கள் உறுப்பினராக சேர்க்கப்படுவர். இதுதவிர 6 மத்திய அமைச்சர், 6 இணை அமைச்சர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்படுவர். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய முதல்வர்கள் பொறுப்பேற்றுள்ளனர்.
இதைத் தொடர்ந்து மாநில கவுன்சில் அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று ஒப்புதல் அளித்தார். இதன்படி, புதிய மாநில கவுன்சிலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சேர்க்கப்பட்டுள்ளார். மாநில கவுன்சிலின் நிலைக்குழுவிலும் ஜெயலலிதா இடம் பெற்றுள்ளார். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உ.பி. முதல்வர் மாயாவதியும் நிலைக்குழுவில் இடம் பிடித்துள்ளனர்.
மாநில கவுன்சிலில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வேளாண்துறை அமைச்சர் சரத்பவார், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், கம்பெனி விவகார துறை அமைச்சர் வீரப்பமொய்லி, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.