சித்தூர்: ஐதராபாத் செல்ல முயன்ற 25 சொகுசு பஸ்களை தெலங்கானா ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வன்மையாக கண்டித்துள்ளார். தனி தெலங்கானா போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் நேற்று தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். அப்போது, Ôபோராட்டத்தை கைவிடுங்கள், ஆந்திராவில் உள்ள 3 பகுதியினரிடையே ஒருமித்த கருத்தின் அடிப்படையில்தான் தெலங்கானா அமைக்க முடியும்Õ என்று பிரதமர் தெரிவித்திருந்தார். இதையடுத்து தெலங்கானா கூட்டுக் குழுவினர் 31 பேர் டெல்லியில் இருந்து இன்று மாலை ஐதராபாத் திரும்புகின்றனர்.
இந்நிலையில் தெலங்கானா பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. மாநில தலைநகர் ஐதராபாத்துக்குள் செல்ல பொதுமக்கள் அஞ்சும் நிலை உள்ளது. அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. விஜயவாடா, திருப்பதி, குண்டூர் போன்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் மட்டும் தனியார் சொகுசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத்துக்கு இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விஜயவாடாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஐதராபாத் நோக்கி 25 தனியார் சொகுசு பஸ்கள் அடுத்தடுத்து புறப்பட்டன. இவை நேற்று காலை தாமதமாக வந்ததால் அவற்றுக்கு ஐதராபாத் வரை பாதுகாப்பு தரமுடியாது என நலகொண்டா மாவட்ட போலீசார் தெரிவித்தனர்.
இதை கண்டித்து பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநில டிஜிபி தினேஷ்ரெட்டி உத்தரவின்பேரில் 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பஸ்கள் இயக்கப்பட்டன. நலகொண்டா மாவட்டம் நார்கெட்பள்ளி அருகே பஸ்கள் வந்தபோது, சாலையின் குறுக்கே 3 டிராக்டர்கள் நின்றன. அவற்றில் ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்தனர். அவர்கள் திடீரென பஸ்கள் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில் பஸ் கண்ணாடிகள் நொறுங்கின. பஸ்சுக்குள் இருந்த பயணிகள், சீட்களுக்கு அடியில் பதுங்கினர். உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கும்பலை கலைத்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினர். இதில் நகிரேக்கல் இன்ஸ்பெக்டர் விஸ்வபிரசாத் உள்பட 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அதன்பின் ஐதராபாத்துக்கு வராமல் பலர் திரும்பினர். போலீஸ் தடியடியை கண்டித்து நலகொண்டா மாவட்டத்தில் 24 மணி நேர பந்த் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ஐதராபாத்துக்குள் எந்த வாகனங்களும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீசி தாக்கியதை ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி வன்மையாக கண்டித் துள்ளார்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook