கேரளாவில் தொடரும் சம்பவம் : ஓடும் ரயிலில் டீச்சரை பலாத்காரம் செய்ய முயற்சி
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே மங்களூர் ரயிலில் ஆசிரியையை பலாத்காரம் செய்ய முயன்ற தமிழக வாலிபர் கைது செய்யப்பட்டார். பாலக்காடு அருகே செரணூரில், ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கீழே தள்ளிவிட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடலூர் மாவட்ட வாலிபர் சார்லி கைது செய்யப்பட்டார். கடந்த 1ம் தேதி நடந்த இச்சம்பவத்துக்கு பிறகு, 6 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் நேற்று முன்தினம் இறந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்றிரவு மங்களூர் ரயிலில் மீண்டும் ஒரு பலாத்கார முயற்சி நடந்துள்ளது.
காசர்கோடைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் திருவனந்தபுரத்துக்கு பயிற்சிக்காக வந்திருந்தார். பயிற்சியை முடித்துவிட்டு நேற்றிரவு மங்களூர் ரயிலில் காசர்கோடு திரும்பிக் கொண்டிருந்தார். எர்ணாகுளம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது அவர் பாத்ரூமுக்கு சென்றார். அப்போது ஒரு வாலிபர் திடீரென பாத்ரூமுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். அலறி அடித்து வெளியே ஓடி வந்த ஆசிரியை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து வாலிபரை கைது செய்தனர்.விசாரணையில் அந்த வாலிபர் குமரி மாவட்டம் கீழ்குளம் பகுதியைச் சேர்ந்த ஆண்டனி சுரேஷ்(23) என்பதும், எர்ணாகுளத்தில் தங்கியிருந்து மீன் பிடித்தொழில் செய்து வருவதும் தெரியவந்தது. பெண்களின் பாதுகாப்பிற்காக, ரயிலில் அவர்களுக்கான பெட்டியை நடுவே இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் ராஜீவ் தத் சர்மா தெரிவித்துள்ளார்.