அணு உலை பாதுகாப்பு புதிய படிப்பு அறிமுகம்!
ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட அணுகசிவு சம்பவத்திற்கு பிறகு உலகம் முழுவதும் இதுதொடர்பான பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அணு உலைகளின் கட்டுமானத்தில் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை மேம்படுத்துதல், புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் எதிர்கால பாதிப்புகளை உணர்ந்து அதற்கேற்றாற்போல் மாற்றங்கள் செய்தல் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
மும்பையில் செயல்பட்டு வரும் ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் அணு உலை பாதுகாப்பு குறித்த இளநிலை, முதுநிலை, சான்றிதழ் பாடப்பிரிவுகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி முதுநிலை பட்டப்படிப்பில் ஸ்பெஷலைசேஷன் இன் நியூக்ளியர் இன்ஜினியரிங் படிப்பை இந்தாண்டு முதல் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்புதலை அண்மையில் பெற்றுள்ளது.
இந்த படிப்பில் அணுஉலையில் நடக்கும் பணிகள் குறித்து விரிவாக கற்பிக்கப்படும். இந்தாண்டு இப்படிப்பில் எட்டு மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள். அணுஉலைகளில் பணியாற்ற தேவையான திறமையான பொறியாளர்களை உருவாக்குவதே இப்படிப்பின் முக்கிய நோக்கமெனவும், இப்படிப்புக்கான அடிப்படை கல்வித்தகுதி, கல்விக்கட்டணம், சேர்க்கை தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் ஐஐடி இணையதளத்திலும், பத்திரிக்கைகளிலும் வெளியிடப்படும் என மும்பை ஐ.ஐ.டி., நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்றைய சூழ்நிலையில் இப்படிப்பை மேற்கொள்பவர்களுக்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் லட்சக்கணக்கில் ஊதியத்துடன் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.