இந்தியாவில் வளர்ந்து வரும் துறைகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முதன்மையாக திகழ்கின்றன. ஆட்டோமொபைல் மற்றும் பிற துறை சார்ந்த உலகளாவிய நிறுவனங்கள்கூட இன்சூரன்ஸ் நிறுவனங்களை தொடங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களை எந்தவித நெருக்கடியும் இல்லாமல் திறமையாக நிர்வகிப்பதில் பணியாட்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே இத்துறை சார்ந்த படிப்புகளை முடித்தவர்களுக்கு உலக அளவில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
குறிப்பாக காப்பீட்டுத் துறை அறிவியல் படிப்பை முடித்த காப்பீட்டு மதிப்பாளர்களை இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் மாத சம்பளம் அளித்து அரவணைத்துக் கொள்கின்றன. இன்சூரன்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு கணிதம் மற்றும் புள்ளியியல் வழி முறைகளை பயன்படுத்தி தீர்வு காண்பதே இவர்களின் மிக முக்கிய பணி.
இன்சூரன்ஸ் தொழிலை நடத்துவதற்கேற்ப பிரீமிய விகிதங்களை நிர்ணயிப்பது, கூடுதல் பிரீமியத்தை தேவைக் கேற்ப பெறுவது, புதிய இன்சூரன்ஸ் திட்டங்களை வடிவமைப்பது போன்றவையும் இந்த நிபுணர்களின் பொறுப்புதான். இப்படிப்பு நிகழ்தகவு, புள்ளியியல், நிதி, பொருளியல் என சில உட்பிரிவுகளை கொண்டது. லைப் இன்சூரன்ஸ், பென்ஷன், ஹெல்த் கேர் மற்றும் சில சமூக நல பிரிவுகளிலும் இப்படிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படிப்புகள் உள்ளன.
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை. * பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி. * அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணா மலை நகர். * அமைட்டி ஸ்கூல் ஆப் இன்சூரன்ஸ் மற்றும் ஆக்சுவரியல் சயின்ஸ், புதுடெல்லி. * பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் டெக்னாலஜி, புதுடெல்லி. * டி.எஸ்.ஆக்சுவரியல் கல்வி நிறுவனம், மும்பை. நர்சி மான்ஜி மேலாண்மை கல்வி நிறுவனம், மும்பை. * மும்பை பல்கலைக்கழகம், மும்பை. * டெல்லி பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இத்துறை சார்ந்த படிப்புகளை அளிக்கின்றன.
இப்படிப்பை முடித்தவர்கள், எல்ஐசி, ஜிஐசி, இஎஸ்ஐசி, வங்கிகள், பங்குச்சந்தை மற்றும் நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியில் அமரலாம். அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் குறைந்த பட்சம் ரூ.8,000 முதல் ரூ.16,000 வரையிலும், தனியார் துறையில் பணியில் உள்ளவர்கள் ரூ.15,000 முதல் 25,000 வரையிலும் ஊதியம் பெறலாம். அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு பணி வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook