மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் போன்றவற்றை முறையாக கற்றுக் கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலில் அணையாவிளக்கு மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த கலை வாணி. அவர் கூறியதாவது:பிஎஸ்சி படித்தவுடன் மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடுதல் பற்றி பயின்றேன். நாயக்கன்பாளையத்தில் எனது வீட்டில் இருந்தபடி தெரிந்தவர்களின் திருமணம், நிச்சயதார்த்தத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு மெஹந்தி அலங்காரம் செய்து வந்தேன். ஓரளவு வருமானம் கிடைத்தது. திருமணமாகி அதே பகுதியில் உள்ள கணவர் வீட்டுக்கு சென்ற பிறகு அங்குள்ள பெண்களுடன் சேர்ந்து அணையா விளக்கு என்ற மகளிர் சுய உதவி குழு அமைத்தேன். பிறகு கோவை டவுன்ஹாலில் பியூட்டி பார்லர் துவக்கினோம். அதை அலுவலகமாக வைத்துக்கொண்டு, 2 ஆண்டுகளாக வெளியிடங்களுக்கு சென்று மணப் பெண், மெஹந்தி அலங்காரங்கள் செய்து வருகிறேன். முகூர்த்த நாட்களில் கூடுதல் வருமானம் கிடைக்கும். இதில் முறையான பயிற்சி, பொறுமை, ஆர்வம் இருக்கவேண்டும். நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்துக்கு செல்வது அவசியம். அவசரகதியில் செய்தால், அலங்காரம் நன்றாக இருக்காது. மணப்பெண்ணுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருந்தே சரும பராமரிப்புகளை மேற்கொள்ள வேண்டும். நிகழ்ச்சிக்கு முன்னதாக மட்டும் மற்ற அலங்காரங்களை செய்ய வேண்டும். எண்ணெய் பிசுபிசுப்பில்லாத, நிலைத்து நிற்கக்கூடிய மேக்கப் சாதனங்களை பகல் நேரத்தில் மணமகளுக்கு பயன்படுத்த வேண்டும். மாலை, இரவு நேரங்களில் வேறு விதமான மேக்கப் யுக்திகளை கையாளலாம். மணப்பெண் அலங்காரத்துக்கு ஒரு மணி நேரம் போதும். மெஹந்திக்கு 2 மணி நேரம். சிவந்த நிறமுள்ளவர்களுக்கு தனியாகவும், மாநிறம் மற்றும் கறுப்பு நிறத்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற கலரை தேர்வு செய்தும் மெஹந்தி போட வேண்டும். புடவை நிறத்துக்கேற்ப போடும் கலர் மெஹந்தியை நிகழ்ச்சியின் 2 மணி நேரத்துக்கு முன்பாக போட வேண்டும். வழக்கமான மெஹந்தி என்றால் ஒரு நாளுக்கு முன்பு போட வேண்டும். மெஹந்தி போடும்போது, பழைய பாணியை பின்பற்றாமல், புதிய டிசைன்கள் போடுவது பலரையும் கவரும். இதற்கு அழகுணர்ச்சியும், கற்பனை திறனும் அவசியம். அனுபவம் அதிகரிக்க அதிகரிக்க தொழில் சிறக்கும். வீட்டில் இருந்தவாறே வெளியிடங்களுக்கு சென்று மணப்பெண் அலங்காரம், மெஹந்தி போடும் பணி மேற்கொண்டால் குறைந்த முதலீட்டில் நல்ல வருவாய் கிடைக்கும்.
For more NEWS updates, follow us on Twitter or join us on Facebook