வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. அவர் கூறியது: வர்த்தக ரீதியாக எனக்கு வெற்றியாக அமைந்த படம் வெண்ணிலா கபடி குழு. அடுத்தடுத்து இயக்கியவை நல்ல படங்களாகவும், தேசிய விருது படங்களாகவும் அமைந்தன. கமர்ஷியல் ஹிட் படம் தர வேண்டும் என்ற முடிவுடன் மாவீரன் கிட்டு ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. எந்தவொரு ஸ்கிரிப்ட்டுமே உண்மை சம்பவத்தின் பின்னணியில்தான் உருவாக்கப்படுகிறது. எனது ஊரில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் கருவை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டது. காதல், நம்பிக்கை துரோகம், ஆணவ கொலை என எல்லா அம்சங்களும் இதில் உள்ளது. ஈழம் சம்பந்தப்பட்ட கதை கிடையாது.
1984-85 கால கட்டங்களில் நடப்பதுபோன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. எம்ஜிஆர் மறைவு குறித்த காட்சிகளும் இடம்பெறுகிறது. விஷ்ணு, பார்த்திபன் இருவருக்கும் சமமான வேடம். சூரி, ஸ்ரீதிவ்யா, ஹரிஸ் உத்தமன் என ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது. 80களின் காலகட்டம் என்பதால் லொகேஷன் தேர்வு சவாலாக அமைந்தது. அந்த காலகட்டத்தில் ஸ்டெப் கட்டிங், சட்டையில் பாபி காலர், பெல்பாட்டம் பேன்ட் பிரபலம். அதற்கேற்ப காஸ்டியூம், சிகை அலங்காரம் செய்யப்பட்டது. 2 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட் நடித்துள்ளனர். அவர்களுக்கு ஸ்டெப் கட்டிங் விக் தேவைப்பட்டது. அதற்கு ஆர்டர் செய்து பெறப்பட்டது. எதற்கும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தாராளமாக செலவு செய்துள்ளனர் தயாரிப்பாளர்கள் ஐஸ்வேர் சந்திரசாமி, தாய் சரவணன். பழனி அருகே உள்ள கிராமத்தில்தான் வெண்ணிலா கபடி குழு படமாக்கப்பட்டது. 8 வருடத்துக்கு பிறகு அதே கிராமத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சில தெருக்களில் கான்கிரீட் சாலைகள் போடப்பட்டிருந்ததால் அதை மறைப்பதற்காக மண் கொட்டி படப்பிடிப்பு நடத்தினோம். பிறகு எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொடுத்துவிட்டோம். டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.