அனுப்பர்பாளையம்: பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் 50 ஆயிரம் பேர் பரவசத்துடன் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்தக்கோயிலின் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று காலை 10 மணிக்கு குண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராடல் நடந்தது. இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார், கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் நடைபெற்றது.
குண்டம் இறங்க இரவு முழுவதும் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வரிசையில் கைக்குழந்தைகளுடன் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது.பூசாரிகள் மனோகரன், முருகானந்தம் ஆகியோர் முதன்முதலில் பரவசத்துடன் குண்டம் இறங்கினர். இதையடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்கினர். இதில் 50 ஆயிரம் பேர் கைகளில் வேப்பிலையுடன் வரிசையாக வந்து, பரவசத்துடன் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தி, கொண்டத்துக்காளியம்மனை வழிபட்டனர்.
விழாவில், அம்மனுக்கு மகாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனைகளும், கூட்டு வழிபாடுகளும் நடந்தது. காலை 9 மணிக்கு குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிஷேகம், அம்மன் பூத வாகன காட்சியுடன் புறப்பாடு நடந்தது. மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் நடக்கிறது. 22ம்தேதி மறு பூஜையுடன் அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம் ஆகியன நடக்கிறது.