மும்பை: மகாராஷ்டிராவில் ரூ.15 லட்சம் கேட்டு நகை கடை அதிபரின் மகனை கடத்தி சென்று கொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிராவில் உள்ள மும்பை அருகே காந்தி சவுக் என்ற பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் சந்தோஷ் ஜெயின். இவரது 7 வயது மகன் நயன். கல்யாண் பகுதி பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 1ம்தேதி நயன் பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தான். அப்போது சிலர் நயனை காரில் கடத்தினர்.பின்னர் சந்தோஷ் ஜெயினிற்கு போன் செய்து, ரூ.15 லட்சம் தரவேண்டும் மறுத்தால் நயனை கொல்வோம் என்று மிரட்டினர். பின்னர் சிறுவனை அம்பர்நாத் என்ற இடத்திற்கு கொண்டு சென்று ஒரு பங்களாவில் அடைத்து வைத்தனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சந்தோஷ் ஜெயின் சம்பவம் குறித்து தானே குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் கொடுத்த யோசனையின்படி சந்தோஷ் ஜெயின் அக்கும்பலை தொடர்பு கொண்டு அம்போலி டிட்வாலா இடையே உள்ள ஒரு இடத்துக்கு பணத்தை கொண்டுவருவதாக தெரிவித்தார்.அதன்பேரில் நேற்று 3 பேர் பணத்தை வாங்குவதற்காக அங்கு வந்தனர். அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
விஜய் துர்கா பிரசாத் துபே (19), ராஜேந்திர யஷ்வந் மோரே (24), சோனாவரி குஷ்வாகா (22) என்பது தெரிந்தது.அப்போது பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுவனை கொலை செய்து முர்பாத் நதி அருகே வீசி விட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இதில் ராஜேந்திரா சந்தோஷிடம் வேலை பார்ப்பவர். விஜய் சந்தோஷின் மற்றொரு நண்பரின் நகை கடையில் வேலை பார்ப்பவர். 3 பேரும் சேர்ந்து திட்டம் தீட்டி இந்த சதி செயலை நிறைவேற்றியதும் தெரியவந்துள்ளது. தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.