விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள உலக கோப்பை தொடரில், நாளை நடக்கும் 2வது அரையிறுதியில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சிட்னியில் நடக்கும் போட்டி இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. இந்திய அணி வரிசையாக 7 வெற்றிகளை பெற்று சூப்பர் பார்மில் உள்ளது. ஆஸ்திரேலியாவுடன் நடந்த டெஸ்ட், ஒரு நாள் தொடர்களில் ஒரு வெற்றியை கூட பெற முடியாமல், அடிபட்ட புலியாக உள்ள இந்தியா, அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், நாளைய போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கலாம். டாப் மற்றும் மிடில் ஆர்டரில் ரன் குவிக்க தவான், ரோகித்சர்மா, கோஹ்லி, ரகானே உள்ளனர். டாப் ஆர்டர் சொதப்பினால், கடைசி கட்டத்தில் ரெய்னா, டோனி அணியை காப்பாற்றி விடுகின்றனர். இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும், தனிப்பட்ட ஒரு வீரரை சாராமால், ஒட்டுமொத்த வீரர்களின் கூட்டு முயற்சியே வெளிப்பட்டுள்ளது.
பந்து வீச்சில் ஷம்மி, மொகித்சர்மா, உமேஷ்யாதவ் சூப்பர் பார்மில் உள் ளனர். சிட்னி மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதால், அஸ்வின், ஜடேஜா மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா லீக் சுற்றில், நியூசிலாந்துடன் மட்டுமே தோல்வியடைந்தது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்று துறைகளிலும் இந்தியாவுக்கு சரி நிகராக உள்ளது. ஆஸ்திரேலியாவின் 12 ஆண்டு கால தொடர் உலக கோப்பை வெற்றிகளுக்கு, 2011 உலக கோப்பையில் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது. அதற்கு பழி தீர்த்து, மீண்டும் ஒரு முறை கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலியா முயலும். பேட்டிங்கில் ஆரோன் பிஞ்ச் தடுமாறுகிறார். ஆனால் வார்னர், சுமித், கேப்டன் மைக்கேல் கிளார்க், பிராட் ஹேடின் இருப்பது பலம்.
அதிரடி மேக்ஸ்வெல்ஸை விரைவாக வெளியேற்றாவிட்டால் ஆட்டத்தின் போக்கே மாறிவிடும். வாட்சன் பார்ம்க்கு திரும்பியுள்ளது இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும். ஸ்டார்க், ஜான்சன், ஹேசல்வுட் என ஆஸ்திரேலியாவின் வேகப் பந்து வீச்சு வலுவாக இருந்தாலும், சிட்னி மைதானத்திற்கு ஏற்ற, சுழற்பந்து வீச்சாளர்கள் இல்லாதது, ஆஸ்திரேலியாவை சற்றே நம்பிக்கை இழக்க செய்துள்ளது. உலக கோப்பையில் இரு அணிகளும் 10 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆஸ்திரேலியா 7 போட்டிகளிலும், இந்தியா 3 போட்டிகளிலும் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. சமபலம் பொருந்திய இரு அணி கள் மோதும் இந்த போட்டியின் ஒவ்வொரு பந்தும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த போட்டி மழையால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.போட்டி நாளை நடக்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் கடந்த சில நாட்களாவே இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டு பேசி வருகின்றனர். நாளைகளத்திலும் ஆஸ்திரேலிய வீரர்கள் வார்த்தை போரில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியர்களின் இந்த சவடால் பேச்சுக்கு, பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியா வெற்றி பெற வேண் டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.