வரும் 1-ம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ. 10 ஆக உயர்வு
புதுடெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களிலும் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிளாட்பாரம் டிக்கெட் ரூ.10 ஆக உயர்த்தப்படுகிறது என்று ரயில்வே அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்தியாவில் தென்னக ரயில்வே உட்பட பல்வேறு ரயில்வே கோட்டங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில்நிலையங்களில் நுழைவதற்கு இதுவரை ரூ.5 பிளாட்பாரம் டிக்கெட் வசூலிக்கப்பட்டது. இதனால் ஏழை மக்கள் மிகவும் பயன் பெற்றனர்.நாடாளுமன்றத்தில் கடந்த மாத இறுதியில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ரயில் பயணிகளுக்கு பலவித வசதிகள் செய்து தரப்படும். அதேபோல், ரயில் டிக்கெட் முன்பதிவு காலத்தை 120 நாட்களாக அதிகரிப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்தார்.இந்நிலையில், பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் அந்தந்த மாநில ரயில்நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் ரயில்வே போலீசார் திணறி வருகின்றனர்,இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, தற்போது ரூ.5 ஆக உள்ள பிளாட்பாரம் டிக்கெட் விலையை வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.10 ஆக உயர்த்திக் கொள்ள அந்தந்த கோட்ட மேலாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது என்று புதுடெல்லியில் உள்ள மத்திய ரயில்வே அமைச்சக வட்டாரம் இன்று தகவல் தெரிவித்தது.