ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆக்ரா, மதுரா வழியாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் பலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ரயில்வே மாஜிஸ்திரேட் தலைமையில் நடைபெற்ற சோதனையில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 40 போலீசார் பிடிபட்டனர். அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.புதுடெல்லியில் இருந்து உ.பி மாநில ஆக்ரா, மதுரா மாவட்டங்கள் வழியாக மகாகவுசல் எக்ஸ்பிரஸ் மற்றும் சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பலஎக்ஸ்பிரஸ் ரயில்கள் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று வருகின்றன.இந்த ரயில்களில் ஏராளமானவர்கள் நீண்ட காலமாக டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்து வருவதாகவும், இதனால் ரயில்வே துறைக்கு ஏராளமான வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, ரயில்வே மாஜிஸ்திரேட் வி.கே.சிங் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு துணை அதிகாரி மற்றும் 5 போலீசாரை கொண்ட டீம் நேற்று மாலை ஆக்ராவில் இருந்து சென்ற மகாகவுசல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.அப்போது ரயிலின் டாய்லெட்டுக்குள் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 40 போலீஸ்காரர்கள் உட்பட 103 பயணிகளை அதிரடி டீம் பிடித்தது. பின்னர் டிக்கெட் எடுக்காமல் பிடிபட்ட 40 போலீசாரிடம் இருந்து ரூ.11,990 அபராதம் வசூலிக்கப்பட்டது. மற்றவர்களிடம் இருந்து ரூ.29,780 அபராதம் வசூலிக்கப்பட்டது.டிக்கெட் எடுக்காமல் டாய்லெட்டில் பயணம் செய்து பிடிபட்ட 40 போலீசார் மீதான நடவடிக்கை குறித்து ஆக்ரா மற்றும் மதுரா மாவட்டங்களில் உள்ள போலீஸ் தலைமையகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று ரயில்வே மாஜிஸ்திரேட் வி.கே.சிங் தெரிவித்தார்.