போதையில் கார் ஓட்டி விபத்து : சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
குளச்சல்: குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மாசி கொடை விழா, கடந்த 10ம் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவு பெற்றது. மறுநாள் காலையில் வியாபாரிகள் தங்கள் கடைகளை காலி செய்து விட்டு ஊருக்கு திரும்பியவண்ணம் இருந்தனர். அப்போது கீரிப்பாறை சப் இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஓட்டி வந்த வந்த கார் மோதியதில் காலிபிளவர் கடை வைத்திருந்த நெல்லை மாவட்டம் ஆலங்குளம் குருவங்கோட்டை சேர்ந்த வெற்றிவேல்(50), கடலை கடை வைத்திருந்த சிவகங்கை சிங்கனாபுரியை சேர்ந்த முகமது அலி ஜின்னா மற்றும் மண்டைக்காடு அருகே கீழ்கரையை சேர்ந்த வில்லுப்பாட்டு பாடகர் நடேசன் (65) உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர்.
மண்டைக்காடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி, சப்இன்ஸ்பெக்டர் தாமோதரன் மீது விபத்து ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்தனர். படுகாயம் அடைந்தவர்கள் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய எஸ்.ஐ. போதையில் இருந்ததாக கூறப்பட்டது.இதையடுத்து விபத்து ஏற்படுத்திய எஸ்.ஐ. தாமோதரன் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் மது அருந்தியிருந்தாரா என்பதை கண்டறிய ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு நெல்லை ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் எஸ்.ஐ. தாமோதரன் குடிபோதையில் இருந்தது உறுதியானது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட செய்து எஸ்.பி. மணிவண்ணன் உத்தரவிட்டு உள்ளார்.