வாஷிங்டன்: சோமாலியா நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளை மேற்கொண்டு வரும் அல்ஷெபாப் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது. அதன் தீவிரவாத தலைவரை கொல்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் நேற்றிரவு அறிவித்தது.இந்திய பெருங்கடல் பகுதியில் கென்யாவுக்கு தென்மேற்கே, எத்தியோப்பியாவுக்கு மேற்கே ஆப்ரிக்காவின் தந்தம் போல் சோமாலியா நாடு அமைந்துள்ளது. இங்கு ஏராளமான தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான அல்ஷெபாப் தீவிரவாத இயக்கம், அல்கய்தா தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.
நைரோபியில் கடந்த 2013-ம் ஆண்டு வெஸ்ட்கேட் பகுதியில் அல்ஷெபாப் தீவிரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் 67 பேர் பலியானார்கள். சோமாலிய தலைநகர் மொகாதிசுவுக்கு மேற்கே பைடோவா நகரில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன. அத்துடன் மொகாதிசுவில் இருக்கும் வெளிநாட்டு தூதரகங்கள், உணவகங்கள் மற்றும் சர்வதேச விமானநிலையம் மீது அல்ஷெபாப் தீவிரவாத இயக்கம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.இதனால் சோமாலியாவை சுற்றியுள்ள எத்தியோப்பியா, கென்யா உள்ளிட்ட பல்வேறு ஆப்ரிக்க நாடுகளுக்கு பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன. அங்குள்ள அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதரகங்கள் செயல்பட முடியாத சூழ்நிலை நிலவுகிறது.
இதைத் தடுக்கும் பொருட்டு, சோமாலியாவில் மொகாதிசுவுக்கு வடமேற்கே பைடோவா நகரில் அமைந்த அல்ஷெபாப் தீவிரவாத முகாம்கள் மீது நேற்று அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் அதன் தலைவர் யூசுப் தீக் பலியானதாக தகவல் வெளியானது.தற்போது அந்த தகவலை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று பென்டகனில் அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஸ்டீவன் வாரன் நேற்றிரவு வாஷிங்டனில் செய்தி வெளியிட்டார்.சோமாலியாவில் தற்போது புதிதாக அமைந்த அரசுக்கு புருன்டி, திஜிபவுட்டி, எத்தியோப்பியா, கென்யா மற்றும் உகாண்டா போன்ற ஆப்ரிக்க யூனியன் நாடுகளின் 22 ஆயிரம் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.