ஓட்டல் தொழிலாளி கொலை மனைவி, கள்ளக்காதலனுக்கு ஆயுள் சிறை தண்டனை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன் (45). ஓட்டலில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா (37). நாகராஜனுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் கணவன்&மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் சங்கீதாவுக்கும் அவரது தங்கையின் கணவர் குமரேசன்(34) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதையறிந்த நாகராஜன் மனைவியை கண்டித்தார். இதனால், ஆத்திரம் அடைந்த சங்கீதா,குமரேசனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதன்படி, கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி குமரேசன், நாகராஜனை தனது மொபட்டில் சமயசங்கிலி காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு இருவரும் மது அருந்தினர். போதை மயக்கத்தில் இருந்த நாகராஜனை கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு குமரேசன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார்.
இதுகுறித்து பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய போலீசார், குமரேசன், சங்கீதா ஆகியோரை கைது செய்தனர். இதுசம்பந்தமான வழக்கு நாமக்கல் மாவட்டமுதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் தனசேகரன் ஆஜராகி வாதாடினார். 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.இந்த வழக்கில் நீதிபதி ராமதிலகம் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம்சாட்டப்பட்ட குமரேசன், சங்கீதா ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.