உத்தர பிரதேசத்தில் கணக்கு போட தெரியாததால் மணமகனை உதறி தள்ளிய மணமகள்: மண்டபத்தை விட்டு வெளியேறியதால் பரபரப்பு
கான்பூர்: உத்தரபிரதேசத்தில் கணக்கு போட தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு கல்யாண மண்டபத்தை விட்டு மணமகள் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரபிரதேசத்தில் உள்ள கான்பூர் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜோடிக்கு பெற்றோர் நிச்சயித்தபடி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணத்தையொட்டி அனைவரும் மண்டபத்தில் குவிந்திருந்தனர். இந்த சூழலில் மணமகனின் படிப்பு மீது மணமகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து தனது உறவினர்களை கொண்டு மணமகனிடம் எளிமையான கூட்டல் கணக்கு ஒன்றை மணமகள் கொடுத்து அனுப்பினார்.
15ஐயும் 6ஐயும் கூட்டினால் என்ன வரும்? என்று கேட்டிருந்தார். அதற்கு விடையாக மணமகன் சரியான விடையான 21க்கு பதிலாக 17 வரும் என ஸ்டைலாக பதில் அளித்துள்ளார். மணமகளுக்கு தூக்கி வாரி போட்டது. கணக்கு போட தெரியாத மணமகன் எனக்கு வேண்டாம் என்று உதறிவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார். நேராக தனது வீட்டிற்கு சென்று விட்டார். உறவினர்கள் எத்தனை சமாதானம் செய்தும் அவரை திருமணம் செய்து கொள்ள அந்த பெண் மறுத்துவிட்டார்.
இந்த தகவல் திருமண மண்டபத்தில் பரவியதை அடுத்து களேபரமானது. மணமகனின் வீட்டார் காவல் நிலையத்தில் முறையிட்டனர். பின்னர் போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இதனையடுத்து பெண் வீட்டார் மணமகனின் வீட்டாருக்கு திருமணத்திற்கு முன்பாக அளித்திருந்த நகை, பணம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை பரஸ்பரம் திருப்பி கொடுக்க சம்மதித்தனர். இதனையடுத்து இரு வீட்டாரும் பரஸ்பரம் சமரசம் பேசி திருமணத்தை முறித்து கொண்டனர்.இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.