திருவெறும்பூர்: குழந்தைகள் கடத்தி விற்கப்பட்டது தொடர்பாக இதுவரை அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட சிறுவனை மீட்க போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த கும்பல், தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்கள், பல் நாடுகளிலிருந்து குழந்தைகளை கடத்தி, திருட்டு தொழிலுக்காக விற்று வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குழந்தை கடத்தல் கும்பலை பிடிக்க திருவெறும்பூர் போலீசார் மும்முரம் காட்டினர்.
குழந்தைகளை கடத்தி குஜராத் மாநிலம் சூரத்தில் திருட்டு தொழில் கும்பலிடம் விற்கப்பட்ட கும்பகோணத்தை சேர்ந்த விஜய், நாகையை சேர்ந்த மகேஷ் (எ) ஞானவேல், சமயபுரத்தை சேர்ந்த பீர்முகமது, திருப்பூரை சேர்ந்த மாரிமுத்து, மேலூர் சின்ராஜ், காட்டூரை சேர்ந்த மணிகண்டன் ஆகிய 6 சிறுவர்களை போலீசார் மீட்டனர். காந்திநகரை சேர்ந்த அர்ஜூனன், ரஜினி, கக்கன் காலனியை சேர்ந்த சுப்பிரமணி, பாரதிபுரத்தை சேர்ந்த முத்துகுமார், காந்திநகர் மதன், மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த அழகர் ஆகிய 6 பேரை கைது செய்தனர். காளிதாஸ், முரளி, சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் துவாக்குடி தெற்குமலை முருகன் கோவில்தெருவை சேர்ந்த மதுரைவீரன் - பழனியம்மாள் தம்பதி மகன் முருகனை(11), வளர்ப்பதாக கூறி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அழைத்து சென்ற காந்திநகர் கிராம தலைவரும், அதிமுக நிர்வாகியுமான மோகன்(48) மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் சிறுவனை மும்பையில் உள்ள ஒரு திருட்டு கும்பலிடம் விற்றது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் சிறுவனை மீட்க மும்பை சென்றுள்ளனர். மேலும் கடத்தலில் தொடர்புடைய ஒரு பெண் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.சிறுவர்கள் கடத்தல் கும்பலிடமிருந்து இதுவரை 6 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மோகனுடன் சேர்த்து 7 பேர் கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.