கொழும்பு: அதிபர் தேர்தலில் தோற்றதற்கு இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தான் காரணம் என இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்ஷே தெரிவித்துள்ளார்.இலங்கையில் கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ராஜபக்ஷே படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன அமோக வெற்றிபெற்று அதிபரானார். 3வது முறையாக அதிபராகிவிட வேண்டும் என்ற முனைப்புடன் முன்கூட்டியே தேர்தலை நடத்திய ராஜபக்ஷேவுக்கு இலங்கை தமிழர்கள் தக்க பாடம் புகட்டினர். சிறிசேனவுக்கு தமிழர்கள் அதிகளவில் வாக்களித்ததால் ராஜபக்சே படுதோல்வியை சந்தித்தார். சிறிசேன அதிபரான நிலையில், ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ராஜபக்ஷே மீதான ஊழல் குற்றச்சாட்டு, ஆயுதங்கள் பதுக்கல் போன்றவற்றை புதிய அரசு கையில் எடுத்தது. ராஜபக்ஷேவின் குடும்பத்தினர் பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றனர். ராஜபக்ஷே மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதிபர் தேர்தலுக்கு பின்னர் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார் ராஜபக்ஷே. தற்போது தேர்தல் தோல்வி, தன்மீதான குற்றச்சாட்டு குறித்து அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:அதிபர் தேர்தலில் என்னை தோற்கடிக்க இந்திய உளவு அமைப்பான ‘ரா’ சதி செய்தது. கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் உளவு அமைப்பு அதிகாரி, எதிர்கட்சிகளை ஒன்று திரட்டி தனக்கு எதிராக செயல்பட்டார்.
நான் தோற்கடிக்கப்பட்டதில் இந்திய பிரதமர் மோடிக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர் பதவிக்கு வந்து ஓராண்டுகூட முடிவடையாத நிலையில், அவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் கூறமுடியாது. தற்போது இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோடியை சந்தித்து பேச உள்ளேன். ஏற்கனவே அவரை 3 முறை சந்தித்து பேசியுள்ளேன். இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரம சிங்கே ஆகியோர் என்னை பழிவாங்கும் நோக்குடன் நடந்து வருகின்றனர். என்னை சிறையில் தள்ள முயற்சித்து வருகின்றனர். எவ்வித ஆதாரமும் இன்றி எனது குடும்பத்தினரின் பாஸ்போர்ட்டை முடக்க சதி செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும். அரசியலில் இருந்து ஓய்வு பெறும் பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு ராஜபக்ஷே கூறியுள்ளார். இலங்கையில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.