பன்றி காய்ச்சலுக்கு இலவச சிகிச்சை : டெல்லி அரசுக்கு பாஜ கோரிக்கை
புதுடெல்லி: டெல்லியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் மாநில பாஜ கோரிக்கை விடுத்துள்ளது.டெல்லியில் பன்றி காய்ச்சல் விழிப்புணர்வு பிரசாரத்தில் காங்கிரஸ் ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்போது பாஜவும் பன்றி காய்ச்சல் குறித்து குரல் எழுப்பத் தொடங்கியுள்ளது. பாஜ மாநில செயலாளரும் எம்பியுமான ரமேஷ் பிதூரி மற்றும் பாஜ தலைவர்கள் விஜேந்திர குப்தா, ஆர் பி சிங், ஆஷிஷ் சூத் உள்ளிட்டோர் நேற்று கவர்னர் நஜீப் ஜங்கை சந்தித்தனர். டெல்லியில் பரவி வரும் பன்றி காய்ச்சல் குறித்து கவர்னருடன் பாஜ தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.பன்றி காய்ச்சல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்றும் பாஜ தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
டெல்லியில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனையில் வசதிகள் குறைபாடு காணப்படுவதாகவும், அதனை களைய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.டெல்லியில் பரவி வரும் பன்றி காய்ச்சல் காரணமாக நேற்று கர்ப்பிணி பெண் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று மட்டும் புதிதாக 79 பேருக்கு பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.