டெல்லியில் கடந்த 2 மாதங்களில் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு
புதுடெல்லி : டெல்லியில் கடந்த 2 மாதங்களில் 300 பாலியல் பலாத்கார வழக்குகளும், 500 பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாலியல் பலாத்காரம் தொடர்பாக தினமும் சுமார் 5 வழக்குகள் வரை பதிவாகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தலைநகரான டெல்லியில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் பலாத்கார சம்பவங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. யாராவது தொந்தரவு கொடுத்தால் பெண்கள் உடனே புகார் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி எண்களை டெல்லி போலீசார் அறிமுகப்படுத்தியுள்ளனர். அதேபோல், கால் டாக்சியில் செல்லும் பெண்கள், தங்கள் செல்போனில் போலீசாரை உடனே தொடர்பு கொள்ளும் வகையில், புதிய அப்ளிகேசன் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் பலாத்கார குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. டெல்லியில் தினமும் சராசரியாக 5 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் 300 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுமட்டுமின்றி பாலியல் தொந்தரவு தொடர்பாக 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களால்தான் 90 சதவீத பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன எனவும், பாலியல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் விசாரித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். அதிகரித்து வரும் பலாத்கார சம்பவங்களை தடுக்க போலீசார் தங்கள் நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.