மேட்டூர் மின்நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து
மேட்டூர்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. அனல் மின் நிலைய தீயணைப்பு படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 4 யூனிட்டுகள் உள்ளது. இதன் மூலம் சுமார் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது புதிதாக ரூ. 3,500 கோடி செலவில் 100 ஏக்கர் பரப்பில் 600 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இதில் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த அனல் மின் நிலையம் முழு உற்பத்தி திறனையும் எட்டியது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் நிலக்கரி அரைக்கப்படும் மில் பிளாண்டில் திடீரென தீ பற்றியது. உடனடியாக அனல் மின்நிலைய தீயணைப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயை அணைக்க சற்று தாமதமாகி இருந்தாலும் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கும். தீ விபத்து குறித்து அனல் மின் நிலைய பொறியாளர் ஒருவர் கூறுகையில், மில் பிளாண்டில் உள்ள அரவை இயந்திரத்தில் 80 டிகிரி வெப்பம் இருந்திருக்க வேண்டும். ஆனால் ஆபரேட்டர் கவனக்குறைவால் வெப்பம் 100 டிகிரியாக இருந்துள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றார். புதிய அனல் மின் நிலையத்திற்கு தனியாக தீயணைப்பு வண்டிகள் இல்லாத நிலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் இங்கு பணிபுரியும் பணியாளர்களின் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.