Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
11
Feb
கண் ஒளி வழங்கும் திருத்தலங்கள்


சிறப்பான வாழ்வருளும்  சின்னசடையம்மன்

ஆடி மாதம் அம்மன் மாதம் என்பார்கள். ஆண்டு முழுவதுமே அம்மன் மாதமாக பக்தர்கள் போற்றிக் கொண்டாடும் தலம் சென்னை புதுப்பேட்டை லாங்க்ஸ் கார்டன் தெருவில் உள்ள சின்னசடையம்மன். அம்பிகை இங்கு கோயில் கொண்ட வரலாறு சுவையானது.ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எழும்பூர் கண் மருத்துவமனையில் ஆலயம் கொண்டிருந்தாள் பெரியசடையம்மன். அப்போது அந்த மருத்துவமனையின் அதிகாரியாக பொறுப்பேற்றிருந்த ஆங்கிலேயர் மருத்துவமனையில் எதற்கு அம்மன் ஆலயம் என்று கூறி ஆலயத்தை அகற்றினார். அன்றே அவரின் கண்பார்வை பறிபோனது. வெளிநாடுகள் பலவற்றிலும் மருத்துவம் பார்த்தும் குணமாகாத அந்த ஆங்கிலேயர் பெரியசடையம்மனிடமே சரணடைந்து அதே இடத்தில் அம்மனுக்கு ஆலயம் எழுப்பினார். தேவியின் பஞ்சசக்திகள் சின்னசடையம்மன், மஞ்சசடையம்மன், சக்தி சடையம்மன், அருள்மகாசடையம்மன், திருச்சடையம்மன் என எழும்பூரைச் சுற்றிலும் ஆலயம் கொண்டருள ஆரம்பித்தனர். அதில் முதன்மையாக சின்னசடையம்மன் பக்தர்களால் ஆலயம் போற்றப்படுகிறது.

மிகவும் தொன்மையான இத்தலத்தின் முகப்பின் இருபுறங்களிலும் தேவியின் வாகனமான சிங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிரதான கருவறையில் சின்னசடையம்மனுடன் ரேணுகாபரமேஸ்வரியும் திருவருள்புரிகிறாள். சின்னசடையம்மனின் திருவடிகளின் கீழ் யந்திரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மற்ற அனைத்து தலங்களிலும் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க அருளும் ரேணுகாபரமேஸ்வரி இத்தலத்தில் இரு தலை நாகம் குடைபிடிக்க திருவருள் புரிவதால் இத்தலம் ராகு/கேது பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. காளஹஸ்தி சென்று காலசர்ப்ப தோஷ பரிகாரம் செய்ய முடியாத அன்பர்கள் இத்தலத்திற்கு வந்து காலசர்ப்பதோஷ பரிகாரம் செய்து வாழ்வில் வளம் பெறுகின்றனர்.

சின்னசடையம்மன் சூலம், வாள், கபாலம் ஏந்தி அழகே உருவாய் அருளே வடிவாய் திருவருள் புரிகிறாள். மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது எனும் பழமொழிக்கேற்ப வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும் கற்பகவிருட்சம் போல் அருள்பவள் இத்தாய் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. இத்தேவியருக்கு பௌர்ணமி தோறும் சங்காபிஷேகம், மகா அபிஷேகம் போன்றவை செய்யப்பட்டு சந்தனக்காப்பு சாத்தப்படுகிறது. தோல்வியாதிகள் நீங்க தேவியிடம் நேர்ந்து கொண்டு உப்பு, மிளகு வாங்கி சமர்ப்பிக்கின்றனர். கோரிக்கை நிறைவேற மட்டைத் தேங்காயை கருவறை பிராகாரத்தில் அவரவர் வேண்டிக்கொண்டபடி 21, 54, 108 முறை உருட்டி வழிபட்டு கோரிக்கைகள் நிறைவேறப்பெறுகின்றனர். ஆடித் திருவிழா காப்பு கட்டி 11 நாட்கள் வெகு விமரிசையாக இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

இத்திருவிழாவின் 9ம்நாள் திருவிழாவில் உடல் முழுதும் எலுமிச்சம் கனிகளைக் குத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான பக்தர்கள் தம் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர். அந்த கனியை பிரசாதமாக வாங்கி உண்டால் புத்திரப்பேறு வேண்டுவோர்க்கு புத்திரப்பேறு கிட்டுவதாகவும், நோய் நீக்கம் வேண்டுவோர்க்கு நோய்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.  தீபுஷ்ப சட்டி ஏந்துதல், நாவில் அலகு குத்திக் கொள்ளல், உடல் முழுதும் அலகு குத்திக்கொள்ளல், தேர் இழுப்பது, வேப்பஞ்சேலை கட்டிக் கொள்வது போன்ற மெய்சிலிர்க்கும் பிரார்த்தனைகளும் அப்போது பக்தர்களால் நிறைவேற்றப்படுகின்றன.

அதே போன்று கண்பார்வைக் கோளாறுகள் நீங்க வேண்டிக்கொண்டவர்கள் அம்மனின் உண்டியல் கண்மலர் வாங்கி சமர்ப்பிக்கின்றனர். எந்த உறுப்பு பாதிக்கப்பட்டதோ அந்த உறுப்புகளை தேவிக்கு வாங்கி போடுவதாக வேண்டிக் கொண்டால் பாதிக்கப்பட்ட உறுப்புகள் சரியாகிவிடும் அற்புதம் இத்தலத்தில் நடந்து வருகிறது. தினமும் இரு கால பூஜைகள் இத்தலத்தில் நடைபெறுகிறது.ஆடி மாத கடை ஞாயிறன்று தேவியை சர்வாலங்காரங்களுடன் ஊஞ்சலில் எழுந்தருளச் செய்து நவசக்தி அர்ச்சனை செய்யப்படுகிறது. அப்போது வளையல்களால் அலங்காரம் செய்து பின் அந்த வளையல்களை பிரசாதமாக பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் தரப்படுகிறது. ஞான சக்தியாய் கண்கண்ட தெய்வமாய் பக்தர்களின் குறை தீர்க்கும் தயாபரியாய் அருட்காட்சி அளிக்கும் சின்னசடையம்மனை தரிசித்து வளமான வாழ்வு பெறுவோம்.

அனைவரும் வணங்கும் அன்னை

 மாந்தர்களைக் காக்க பல்வேறு தலங்களில் நிலைகொண்டாள் ரேணுகாதேவி. அவற்றில் ஒன்றுதான் சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி.கருவறையில் டமருகம், சூலம், கத்தி, கபாலம் ஏந்தி ஆறடி உயரத்தில் அன்னை அமர்ந்திருக்கிறாள். அவள் கையில் மிகப்பெரிய திரிசூலம் சாத்தப்பட்டிருக்கிறது. பக்தர்களின் துன்பங்களை எல்லாம் தூள் தூளாக்குவேன் என்று சொல்லாமல் சொல்கிறது அந்த சூலாயுதம். 1940களில் நடந்த இனக்கலவரத்தின்போது மாற்று மதத்தைச் சேர்ந்த சிலர் இந்த அன்னையின் ஆலயத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தனராம். அவ்வாறு வழக்கு தொடுத்தவர்கள் இல்லங்களில் எல்லாம் கடுமையான வைசூரி நோய் தாக்க, அவர்கள் ரேணுகா பரமேஸ்வரியைச் சரணடைய, ஆச்சரியப்படும் வகையில் அவர்களின் நோய் குணமடைந்ததாம். இன்றும், ஜாதி, மத பேதமில்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இத்தலத்திற்கு வந்து அன்னையை வணங்குகின்றனர்.

குறிப்பாக கண் நோய்களை நீக்குவதிலும், மஞ்சள் சங்கு தீர்த்த பிரசாதத்தினால் அம்மை நோயைத் தீர்ப்பதிலும், வேறுபிற தீரா நோய்களைத் தீர்ப்பதிலும் நிகரற்ற வல்லமையுடன் துலங்குபவள் இந்தத் தாய் என பக்தர்கள் போற்றுகின்றனர். தினம் தினம் காணிக்கையாக வரும் விதவிதமான புடவைகளில், நாளொரு அலங்காரத்தில் மிளிர்கிறாள் ரேணுகா தேவி. நத்து, மூக்குத்தி, புல்லாக்கு அணிந்து அன்பே உருவாய், அருளே வடிவாய், புன்முறுவல் பூத்த முகத்தினளாய் அருளாட்சி புரியும் தேவியின் சந்நதியில் இனம் புரியா ஆன்மிக அதிர்வை உணர முடிகிறது. பொங்கல் வைத்தல், எலுமிச்சை மாலை, வேப்பிலை மாலை சாத்துதல் என இங்கு பிரார்த்தனைகள் நிறைவேற்றப்படுகின்றன.

சித்திரை மாதம் கத்திரி வெயில் காலத்தில் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையன்று மூவாயிரம் இளநீரால் ரேணுகாதேவிக்கு அபிஷேகம் செய்வார்களாம். தாய் குளிர பூமி குளிருமன்றோ? ஆடி மாதம் மூன்றாம் நாள் அதிகார நந்தி மீது சிவபார்வதி திருக்கோலம், 13ஆம் நாள் பவனி உற்சவம், புரட்டாசி நவராத்திரியில் நவ வித அலங்காரம், தை மாதம் 108 திருவிளக்கு பூஜை, மாசி மாதம் கடலில் தீர்த்தவாரி என ஆண்டு முழுதும் திருவிழாக் காணும் தயாபரி இந்த அன்னை. மண்ணுலகை உய்விக்க வந்த இந்த மகாசக்தியின் திருக்கோயில் சென்னை திருவல்லிக்கேணி தேவராஜமுதலித் தெருவில் உள்ளது.

வெள்ளீஸ்வரர் கோவில்

அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் கபாலீச்சுரத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். வேதாரணியம் சிவாலயத்தில் அணையும் நிலையில் இருந்த விளக்கைத் தூண்டி எரியச் செய்த ஓர் எலியைச் சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் பனைத்துணையாகப் பாவித்தது பரமனின் பெருங்கருணை. ஆனால், அதிகாரப் போதைக்கு ஆளான மகாபலி, தேவர்களையே அவமதிக்க, அவனுக்குப் பாடம் புகட்ட, திருமால் வாமனன் அவதாரத்தில் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க, மகாபலி மமதையோடு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட, தானத்திலும் சிறந்தது நிதானம் என்று அவனுக்கு உணர்த்த அசுர குலகுரு சுக்கிராச்சாரியார் முயன்றார்.

மகாபலி எடுத்த கெண்டியின் நீர் வரும் வாயை, அவர் வண்டு உருவம் எடுத்து அடைத்துக் கொள்ள, அதனை அறிந்த வாமனராக வந்த திருமால் தன் தர்ப்பைப் புல்லினால் கெண்டியின் வாயைக் குத்த வண்டு உருவில் வந்த சுக்கிராச்சாரியார் கண் பார்வையை இழந்து கீழே விழுந்தார். தானத்தைத் தடுத்த பாவத்திற்குக் கிடைத்தது தண்டனை. திருமால் தன் நீண்ட திருவடியால் மேலுலகத்தை ஓரடியாலும், கீழுலகத்தை ஓரடியாலும் அளந்து எடுத்து, மூன்றாவது திருவடியை மகாபலியின் தலையில் வைத்து அவனைப் பாதாளத்தில் தள்ளினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற, திருமயிலை வந்து இங்கு இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். வைகாசி வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமான் திருமால், பிரம்மா சகிதமாகத் தோன்றி, சுக்கிராச்சாரியருக்குக் கண்பார்வை அருளினார்.இத்திருக்கோயிலில் வைகாசிப் பெருவிழாவில் எட்டாம் நாள் சுக்கிரன் கண்ணொளி பெறும் விழாச் சிறப்பாக நடைபெறுகிறது. வெள்ளி என்ற சுக்கிரன் வழிபட்ட இறைவன், சுக்கிரன் விரும்பியவாறு வெள்ளீசுவரர் என்ற பெயர் தாங்கினார். அன்று காலை 11 மணியளவில் சுக்கிராச்சாரியார், மகாபலிச் சக்கரவர்த்தி, வாமனர் ஆகிய மூன்று உற்சவ மூர்த்திகளை, மயிலை சித்திரக்குளத்தின் அருகே எழுந்தருளச்செய்து, அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர் உற்சவமூர்த்திகளாக உலகளந்த பெருமாள், பிரம்மா, பிரதோஷ நாயகர் சிவபெருமான் அங்கு எழுந்தருளிட பிரதோஷ காலம் 4 1/2 - 6 மணிக்குத் தீபாராதனை நடைபெற்றுக் கண்ணொளி வழங்கப்படும். அப்போது ஓதுவார்கள் பதிகம் பாடுவார்கள். சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த தம் கண்பார்வையைப் பெற வேண்டிப் பாடிய உற்றவர்க்கு உதவும், விற்றுக்கொள்ளீர் எனத் தொடங்கும் இரு பாடல்கள் இக்கோயில் சுவரில் பதிக்கப் பெற்றுள்ளன. செய்த தவறை உணர்கின்றவர்களுக்குத் தயவு காட்ட இறைவன் தயாராக உள்ளான் என்பதனால்தான் காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே என்று மணிவாசகரும், காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே என்று வள்ளலாரும் மனம் கசிந்து பாடினார்கள். கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழா பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதுதவிர திருவெம்பாவை பத்து நாட்கள், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, மாசிமகக் கடலாடுதல், நவராத்திரி, ஒட்டக்கூத்தர் விழா, சேக்கிழார் விழா, 1008 சங்காபிஷேகம், கந்தசஷ்டி, திருஅண்ணாமலையார் தீபம், மகாசிவராத்திரி முதலிய முக்கிய உற்சவங்கள் பக்தர்களைப் பக்தி வெள்ளத்தில் திளைக்க வைக்கின்றன.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement