புவனேஸ்வரம்: இந்தியா முழுவதும் நேற்று பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைந்தது. இதைத் தொடர்ந்து, அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக, ஒடிசா மாநில அரசு இன்று முதல் பஸ் கட்டணத்தை குறைக்கிறது என்று மாநில போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை சந்தை மதிப்பில் கணிசமாக அளவு குறைந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் நேற்று டீசல் மற்றும் பெட்ரோலின் விலை கணிசமான அளவுக்கு குறைக்கப்பட்டது.கடந்த காலங்களில் டீசல் விலை உயர்ந்தபோது தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் அரசு போக்குவரத்து கழகத்தின் பஸ் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. தற்போது டீசலின் விலை கணிசமாக குறைந்திருப்பதால், ரயில் மற்றும் பஸ் கட்டணங்களையும் குறைக்க வேண்டும் என்று அகில இந்திய அளவில் பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.
டீசல் விலை குறைவை தொடர்ந்து, பஸ் கட்டணம் குறைப்பு குறித்து தமிழ்நாடு உட்பட எந்த மாநிலங்களிலும் அரசு தரப்பில் முடிவெடுக்கவில்லை. ரயில் கட்டணமும் குறைக்க முடியாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ள£ர். தற்போது ஒடிசா மாநிலம் முன்னோடியாக இன்று பஸ் கட்டண குறைப்பை அறிவித்துள்ளது.இதன்படி, சாதாரண பஸ் கட்டணம் கிலோ மீட்டருக்கு 60லிருந்து 59 காசாகவும், விரைவு பஸ் கட்டணம் 63லிருந்து 62 காசாகவும், ஏசி பஸ்களுக்கு 1.01 பைசாவாகவும் குறைக்கப்படுகிறது. டீசலின் விலை மேலும் குறைந்தால், பஸ் கட்டணத்தை மேலும் குறைப்பது குறித்து மாநில அரசு முடிவெடுக்கும் என்று ஒடிசா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ரமேஷ்சந்திர மஜ்ஜி கூறினார்.