சென்னை: சட்ட கல்லூரி இடமாற்ற விவகாரம் தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வருகிற 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் தா.பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழகத்தில் சட்டம ஒழுங்கு எல்லா துறைகளிலும் சீரழிந்து உள்ளது, கொலை, கொள்ளை, பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நிதி நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது. அரசு கஜானா திவாலாகியுள்ளதோ என்று தான் நினைக்க தோன்றுகிறது. எனவே, தமிழக அரசு நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேணடும். மத்திய அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி நிதி நிலைமையை சரி செய்ய வேண்டும்.
சட்ட கல்லூரி இடமாற்றம் குறித்து மாணவர்கள், பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும். சட்ட கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது. டெல்லியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜ 124 எம்பிக்களை யும், 23 மத்திய அமைச்சர்களை யும் பிரசாரத்தில் களம் இறக்கியுள்ளது. டெல்லியில் வெற்றி பெற்றால் தான் பாஜ ஆட்சி பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பிரதிபலிக்கும், இதற்காக தான் இவ்வளவு பேரை குவித்துள்ளது. இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறினார்.