திருமலை: ஆந்திராவில் தற்போது பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 37 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.பன்றிக் காய்ச்சலை தடுக்க முதல்வர் சந்திரபாபுநாயுடு, சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சையும், சிறப்பு வார்டுகளும் அமைக்கவேண்டும் என்றும், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எங்கெல்லாம் சென்று வந்தார்கள் என விசாரிக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தெலங்கானாவில் நேற்று முன்தினம் பன்றிக்காய்ச்சல் நோயால் 2 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம், புங்கனூரைச் சேர்ந்த அரசு ஆசிரியர் சோமிராஜு (45), கடந்த ஒரு மாதமாக பன்றிக்காய்ச்சல் நோயால் அவதிப்பட்டுள்ளார். இதனால் அவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக சித்தூர் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாவட்டத்தில் 3 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையிலும் மற்ற 2 பேர் சென்னை மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.