பாப்பரம்பாக்கத்தில் ஊரக வளர்ச்சித் துறை பணிகள் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் ஆய்வு
திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நாடாளுமன்ற நிலைக் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் ஊராட்சியில், டாக்டர். வேணுகோபால்.எம்.பி., தலைமையிலான நாடாளுமன்ற நிலைக் குழுவினர், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பணிகளை நேற்று ஆய்வு செய்ய வந்தனர். இக்குழுவினரை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், ஊராட்சித் தலைவர் இந்திரா வரதராஜன் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மேள, தாளம் முழங்க வரவேற்றனர்.
தொடர்ந்து ஊராட்சியில் உள்ள குளம், சோலார் மின் விளக்குகள், ஒருங்கிணைந்த சமத்துவ சுடுகாடு, சுகாதார வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். குளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பூங்காவையும் அவர்கள் பார்வையிட்டனர். பின்னர் அல்லிமேடு, ஒரக்காடு ஆகிய கிராமங்களுக்கு சென்று ஊரக வளர்ச்சித்துறை பணிகளை ஆய்வு செய்தனர். இக்குழுவில் உள்ள 13 எம்.பி.க்கள் மற்றும் மத்திய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பா.ரவிச்சந்திரன், ஒன்றிய குழு தலைவர் தட்சணாமூர்த்தி, துணைத்தலைவர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.