Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2014
31
Dec
பரமாத்மாவுடன் கலக்கும் ஜீவாத்மா: நாளை சொர்க்கவாசல் திறப்பு



மாதங்களில் நான் மார்கழி என்கிறார் கிருஷ்ண பரமாத்மா. வைகுண்டக் கதவுகள் திறந்து பரந்தாமன் தரிசனம் கிடைப்பது இந்த மாதத்தில்தான்.பெருமாளுடன் ஐக்கியம்: மார்கழியில் வளர்பிறை ஏகாதசி முக்கியத்துவம் வாய்ந்தது. ஏகாதசி என்றால் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று என பதினொன்றையும், அதாவது நம்மையே பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானிப்பதே ஏகாதசி விரதம். உடல் மற்றும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றுவதே உபவாசம். ஏகாதசி தினத்தில் பூரண உபவாசம் இருக்கவேண்டும். குளிர்ந்த நீர் குடிக்கலாம். ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.அரங்கன் வருகிறார்: இங்கு ஓர் ஆண்டு என்றால் தேவருலகுக்கு ஒருநாள். தை முதல் ஆனி வரை பகல், ஆடி முதல் மார்கழி வரை இரவு. இதில், அதிகாலை நேரம் 4 முதல் 6 மணி வரை மார்கழி எனலாம். அதனால்தான், மார்கழியில் அதிகாலையில், திருப்பள்ளியெழுச்சியும், திருப்பாவையும் படித்து மகாவிஷ்ணுவைப் போற்றுகிறோம்.

 தேவர்களின் அதிகாலை நேரத்தில் வைகுண்ட வாசல் திறந்தே இருந்தாலும் அரங்கன் அவ்வழியாக வந்து தரிசனம் தரும் நாள் வைகுண்ட ஏகாதசி. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அரங்கன் அதிகாலையில் சொர்க்கவாசல் வழியாக வருகிறார். இதுவே சொர்க்க வாசல் திறப்பு. வாழும் காலத்தில் செல்வத்தையும், வாழ்வுக்குப் பின், பரமபதத்தையும் வைகுண்ட ஏகாதசி தரவல்லது. முக்தி ஏன்?: நல்லவர்கள் காலடி பட்டவுடன் வைகுண்டம் திறந்துகொள்ளும்.  ஏகாதசி திதியில் முழுமையாக திறந்திருக்கும். வைகுண்ட ஏகாதசியன்று மரணமடைபவர்கள் முக்தியடைவார்கள் என்பதற்குக் காரணம் உண்டு. வாழ்நாள் முழுவதும் இறைபக்தியுடனும், தர்ம சிந்தனையுடனும், இனிய குணத்துடனும் இருப்பவர்களுக்கே ஏகாதசியன்று முக்தி சாத்தியமாகிறது என்கிறார்கள் பெரியோர்கள்.

ஏழு பிரகார மகிமை: பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்தான், இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில். பிரகாரங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் உயர்ந்திருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்கும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி உள்ளது. உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனது. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.பூலோகத்தில் வாழும் மனிதர்களின் ஆத்மா, மகாவிஷ்ணுவின் திருவடியை அடைந்து முக்தி பெற்று மோட்சத்துக்கு அதாவது வைகுண்டம் செல்வதை,  நம்பெருமாளே நடத்திக் காட்டுவதே, இவ்விழாவின் நோக்கம்.

பகல் பத்து - ராப்பத்து: நாலாயிர திவ்ய பிரபந்தத்தை பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் அபிநயத்துடன் படிப்பதே வைகுண்ட ஏகாதசி விழா. ஸ்ரீரங்கநாதரிடம் மூலஸ்தானத்தில் அனுமதி பெற்று, நாலாயிர திவ்ய பிரபந்தத்தைப் படிப்பதே, விழாவின் துவக்கம். இதுவே திருநெடுந்தாண்டகம். அனைத்து திவ்ய தேசங்களில் இருந்தும் தெய்வப் பெருமாள்கள் அனைவரும் இக்கோயிலில் எழுந்தருள்வதாக கருதப்படுவதால், இங்கு படிக்கும் திவ்ய பிரபந்தத்தை இந்த நேரத்தில் வேறு எங்கும் படிக்க மாட்டார்கள். அப்படிப் படித்தால் அதற்குப் பலன் இருக்காது என்பது ஐதீகம். திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சி  மூலஸ்தானம் முன்பு காயத்ரி மண்டபத்தில் நடைபெறும். தமிழ் அமுது: திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப்பாடல்களை ஒரு கார்த்திகை தினத்தில் பெருமாள் முன் பாடினார்.

அதைக் கேட்டு பெருமகிழ்ச்சி அடைந்த பெருமாள் திருமங்கை ஆழ்வாரிடம், ‘என்ன வேண்டும்‘ என்று கேட்க, ‘எனக்கு எதுவும் வேண்டாம். வைகுண்ட ஏகாதசி விழாவில் வேதங்களைக் கேட்டு மகிழ்வது போல், அழகிய அமுதாம் தமிழ்மொழியில் நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழிப் பாடல்களை கேட்டருள வேண்டும்‘ என்று கேட்க அதற்கு பெருமாளும் சம்மதித்தார். திருமங்கை ஆழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், அவர் பாடிய  திருமொழிப்பாடல்களையும் மற்ற ஆழ்வார்கள் பாடிச் சென்ற பாடல்களையும் பெருமாள் கேட்டருளும் விதமாக ‘பகல் பத்து உற்சவம்‘ கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தின் 10 நாட்களும் விலை உயர்ந்த திருவாபரணங்கள், சவுரிமுடிக்கொண்டைகள் உள்பட பல்வேறு அலங்காரங்களுடன் தினமும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை புறப்பட்டு அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர்கள் அபிநயத்துடன் படிக்கும் பாசுரங்களை கேட்டருள்வார்.

மோகினி அலங்காரம்: அமிர்தம் கடைந்த பிறகு எம்பெருமாள் மோகினி ரூபம் எடுத்ததை உணர்த்தும் வகையில், பகல்பத்து உற்சவத்தின் 10ம் நாள் நம்பெருமாள்  மோகினி அலங்காரத்தில்(நாச்சியார் திருக்கோலம்) எழுந்தருள்கிறார்.ராப்பத்து என்பது மார்கழி மாதம் சுக்ல பட்ச ஏகாதசியில் இருந்து நடைபெறும் பத்து நாள் உற்சவம். முதல் நாள், சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி. ராப்பத்து 10 நாள் உற்சவத்தின்போது பெருமாள், மோட்சத்துக்கு செல்லும் ஜீவாத்மாவாக நம்பெருமாளே நடித்துக் காட்டுகிறார்.பரமபதத்தில் பகவான் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார். அதேபோல, இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள அதே வடிவிலான திருமாமணி மண்டபத்தில் எழுந்தருள்வார்.சொர்க்கவாசல் திறப்பு அன்று(நாளை காலை 5 மணிக்கு), நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்படும் முன் ஆரியபடாள் வாசல், நாழிகைக் கேட்டான் வாசல் முதலியன மூடப்படும்.

நம்பெருமாள் ரத்தின அங்கியுடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சிம்மகதியில் ஒய்யார நடையுடன் வருவார். தெற்கு முகமான அழகிய மணவாளன் திருமண்டபத்திற்கும், மத்தியில் நாழிகைக் கேட்டான் வாசலுக்கும் சென்று முன் நின்றவுடன் அந்த வாசல்கள் திறக்கப்படுகிறன்றன.நம்பெருமாள் பரமபத வாசலுக்கு எதிரில் சென்று வடக்கு முகமாய் நின்றதும், அந்த வாசல் கதவுகள் திறக்கப்படும். இந்த வாசலுக்கு கிழக்கு பக்கத்தில் விரஜா நதியின் ஸ்தானத்தில் ஒரு கிணறு இருக்கிறது. இங்கிருக்கும் நாலுகால் மண்டபத்தில் சென்றதும், அதுவரை நம்பெருமாளுக்கு சாத்தி வரும் போர்வை களையப்பட்டு, புதுமாலைகள் சமர்ப்பிக்கப்படும்.  அதன்பின் ரத்தின அங்கியுடன் நம்பெருமாள் பரமபதவாசல் நுழைந்து செல்வார். விரஜா நதியில் தீர்த்தமாடிய முக்தன், பரிசுத்தமான சத்துவ குணங்கள் நிரம்பிய உடலைப் பெற்று, அத னால் ஏற்படும் ஜோதியாய் அப்போது காட்சியளிப்பார்.

நம்பெருமாள் சொர்க்கவாசலை கடந்த பின் சந்திரபுஷ்கரணி அருகே உள்ள பூப்பந்தல் நடைபாதை வழியாக ஆயிரங்கால் மண்டபத்தை நோக்கி செல்வார். ஆயிரங்கால் மண்டபம் எதிரே அமைக்கப்பட்டுள்ள திருக்கொட்டகையில் நம்மாழ்வார், திருமங்கைமன்னன், உடையவர் ஆகியோர் நம்பெருமாளை எதிர்கொண்டு அழைக்கின்றனர். அங்கு ஆழ்வார்களுக்கு மரியாதை செய்து விட்டு ஆயிரங்கால் மண்டபத்திற்கு வந்து படியேற்ற மாலை சாத்திக் கொள்கிறார். அதன்பின் நம்பெருமாள் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளும் போது அவர் எதிரில் ஆழ்வார்கள் வீற்றிருப்பது முக்தன் பரமபதத்திலுள்ள திருமாமணி மண்டபத்தை அடைந்திருப்பதை போன்று காட்சி அளிக்கிறது.அன்று ‘உயர்வற உயர் நலம்‘ திருவாய்மொழி பாசுரம் தொடக்கமாகி அரையர் அபிநயத்துடன் விளக்கமளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் நம்பெருமாள் பனிக்காக போர்வை சாத்திக்கொண்டு விளாமிச்சி வேர் சப்பரத்தில் எழுந்தருளி ஒய்யார நடையுடன் நாழிக்கேட்டான் வாசல் வழியாக ஏகாந்த வீணையுடன் படியேறி மூலஸ்தானத்திற்கு சர்ப்பகதியில் சென்றடைகிறார்.

நம்மாழ்வார் மோட்சம்ராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் எப்படி மோட்சத்தை அடைந்தார் என்பது நடத்தி காட்டப்படுகிறது. அன்று நம்மாழ்வார் பரமபதவாசலுக்குச் செல்லும் வழியில் முக்தன் வேடத்தில் இருப்பார். கிரீடம் முதலான திருவாபரணங்கள் இல்லாமல், பட்டு பீதாம்பரம் இல்லாமல் வெள்ளையாடை உடுத்தி, பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சி அளிப்பார்.நம்பெருமாள் வழக்கம் போல மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வந்து, சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருள்வார். அதன்பின் திருமாமணி மண்டபம் வந்து சேர்ந்து திருவந்திக்காப்பு நடைபெறும். அதன்பின் அர்ச்சகர்கள் நம்மாழ்வாரை கையில் ஏந்திக் கொண்டு வந்து நம்பெருமாளின் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றிபடும்படி சமர்ப்பிப்பார்கள்.

அதை தொடர்ந்து துளசியால் ஆழ்வாரை மூடுவர்.  நம்மாழ்வார் நம்பெருமாளுடன் கலந்து மோட்சத்தை அடையும் நிகழ்ச்சியாக நடத்திக் காட்டப்படுகிறது. நம்மாழ்வார் நம்பெருமாளின் திருவடிகளை தொழுத பிறகு பெருமாள் நம்மாழ்வாருக்கு தனது மாலை, கஸ்தூரி திருமண்காப்புகளை அளிப்பார். இதன்மூலம், பரமபதத்துக்கு சென்ற முக்தனுக்கு பகவான் அருள்புரிவது  காட்டப்படுகிறது.பின்னர், நம்பெருமாள் திருமாமணிமண்டபத்தில் இருந்து புறப்பட்டு திருக்கொட்டகையிலுள்ள நாலுகால் மண்டபத்தில் நின்று கொண்டு ஆழ்வார்களுக்கு மரியாதை செய்து அனுப்பிவிட்டு மூலஸ்தானம் சென்றடைகிறார். இத்துடன் ராப்பத்து உற்சவம் நிறைவடைகிறது.

கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement