ஒவ்வொரு வீட்டிலும் தோட்டம் அமைத்து நமக்கு தேவையான காய்கறிகளை நாமே உற்பத்தி செய்து கொள்ளலாம். வருடம் முழுவதும் தேவையான காய்கறிகளை பெறலாம். பலவகை காய் கறிகளை ஒரே சமயத்தில் பெற முடியும். தோட்டம் அமைத்து பராமரிப்பதற்காக செய்யும் சிறு வேலைகள் உடற்பயிற்சியாக அமைந்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. வீட்டுக்குத் தேவையான காய் கறிகளுக்காக சந்தையை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை. சிறிய பரப்பில் பயிர் செய்வதால் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகள் போன்ற ரசாயன மருந்துகளை அதிக அளவில் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் சாகுபடி செய்து நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை பெறலாம். காய்கறிகளை தேவைக்கேற்ப அவ்வவ்போது பறித்து பயன்படுத்தலாம். காய்கறிகளில் உள்ள உயிர் சத்துகளை இழந்து போகாமல் உபயோகிக்கலாம். வீட்டைச் சுற்றிலும் காலியாக வீணாக இருக்கும் இடங்களில் செடிகளை வளர்ப்பதால் நாட்டின் காய்கறி உற்பத்தி செய்யும் பரப்பளவும் உற்பத்தியும் அதிகமாகிறது.
சமையலறை மற்றும் குளியல் அறையில் இருந்து வரும் நீரை வீணாக்காமல் பயனுள்ள வகையில் உபயோகிப்பதோடு இந்த நீர் பல இடங்களில் தேங்கி சுற்று சூழல் மாசுபடுவதை தடுக்கலாம். காய்கறி விலை உயர்வை கண்டு பயப்படாமல் தேவையான அளவு உணவில் பயன்படுத்தலாம். வீட்டுத்தோட்டம் அமைப்பதன் மூலம் வீட்டிற்கு அழகு சேர்க்கலாம். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப காய் கறிகளை பயிரிட்டு ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உழைப்பில் விளைந்த காய், பழம் எண்ணும் உவகை உள்ளத்தில் ஏற்படும். கட்டிடத்தின் அழகு கூடுவதுடன் காய்கறி, பழங்கள் போன்ற உணவு பொருட்களையும் அளித்து சீதோஷ்ண நிலையை கட்டுப்படுத்தி பொழுது போக்கு அம்சமாகவும் விளங்குகிறது.