திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 24ல் தொடக்கம்: 29ம் தேதி சூரசம்ஹாரம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. 29ம் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது. அறுபடை வீடுகளில் 2வது படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா வரும் 24ம்தேதி துவங்குகிறது. அன்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனையும், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளுகிறார். காலை 7 மணிக்கு கோயில் 2ம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகத்தை தொடர்ந்து மூலவருக்கு மகாதீபாராதனை நடக்கிறது. பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனையை தொடர்ந்து வேள்விசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி, வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் மேளவாத்தியம் முழங்க சண்முகவிலாசம் சேர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது.
தினமும் காலை, இரவில் வேள்வி பூஜை நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை மற்றும் கால பூஜைகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் வரும் 29ம் தேதி நடக்கிறது. மறுநாள் (30ம் தேதி) காலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், மாலை 3 மணிக்கு கோயிலில் இருந்து சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி 6 மணிக்கு 5ம் சந்தியில் மாலை மாற்று விழா நடக்கிறது. இரவில் சுப்பிரமணியசுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் கோயிலில் திருக்கல்யாணம் நடக்கிறது. கந்த சஷ்டி திருவிழாவின் 7 நாட்களிலும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் வந்து கோயில் உள் மற்றும் வெளி பிரகாரங்கள், விடுதிகளில் தங்கி விரதம் இருந்து
சுவாமியை தரிசிப்பார்கள்.