சித்தூர்: தெலுங்கு தேசம் கட்சியை தேசிய கட்சியாக்க சந்திரபாபு நாயுடு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தின் பிரதான கட்சியான தெலுங்கு தேசம் கட்சியை நிறுவியவர் என்.டி.ராமாராவ். இவருக்கு பிறகு அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு கட்சித்தலைவராக பொறுப்பேற்றார்.இவர் 1995 முதல் 2004 வரை ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரே கூடுதலான நாட்கள் பதவியில் இருந்த ஆந்திர முதலமைச்சர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு 2014ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 175 தொகுதிகளில் 102 தொகுதிகளை கைப்பற்றி ஆந்திர மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ளார். மக்களவை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் அதிக இடங்களை பிடித்தனர்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை பலப்படுத்தவும், அதை தேசிய கட்சியாக உயர்த்தவும் சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதற்காக முதல்கட்டமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அலுவலகங்களை அமைக்க அக்கட்சி முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தமான் நிகோபாரிலும் கட்சியை விஸ்தரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. தெலுங்கு மக்கள் அதிகமாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் அலுவலகங்களை அமைத்து கட்சி நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் பெங்களூரில் இருந்து சிமோகாவரை அதிக தெலுங்கு மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் பெங்களூர் கிராமிய மாவட்டத்தில் 28 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதால் இந்த தொகுதிகளில் உள்ள தெலுங்கு மக்கள் மத்தியில் கட்சியை பரப்ப வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தொகுதியான சிகாரிபுரத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெலுங்கு மக்கள் உள்ளதாக கட்சி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.மேலும் பெல்லாரி, சிக்பெல்லாப்பூர், ராயச்சூர், கோலார், குப்பல் மாவட்டங்களில் தெலுங்கு மக்கள் அதிகம் உள்ளதால் இங்கு கட்சியை பலப்படுத்த பலமான தலைவர்களை தேடிவருகிறது.
தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கிருஷ்ணகிரி, ஒசூர், மதுரை, கோவை ஆகிய பகுதிகளில் தெலுங்கு மக்கள் உள்ளதால் இங்கும் தெலுங்கு தேசம் கட்சி தொடங்கப்பட்டு நிர்வாகிகளை நியமிக்க தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது.ஆந்திர மாநில தெற்கு ஆந்திரா எல்லை ஒட்டியுள்ள ஒடிசா மாநிலத்தில் பரம்பரம், ராயகட், கர்லாகிமிட்டி, கம்ஜாம், கஜபதி, ஜெய்க்கூர் ஆகிய மாவட்டங்களிலும் கட்சி பலப்படுத்தப்பட உள்ளது. மகாராஷ்டிராவிலும் கட்சியை பரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக அந்தமான் நிகோபார் தீவில் அஜூசூர் என்பவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.