காமராஜரின் 40வது ஆண்டு நினைவு நாள் பேரணி: தனபாலன் அறிவிப்பு
சென்னை: பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் இன்று வெளியிட்ட அறிக்கை:அனைத்து சமுதாய மக்களும் கல்வி கற்க வேண்டுமென்று இலவச கல்வியோடு மதிய உணவையும் தந்தவர், தமிழகத்தில் 14 அணைக்கட்டுகளை கட்டி விவசாய புரட்சியை ஏற்படுத்திய வித்தகர், இரண்டு பிரதமர்களை உருவாக்கி இந்தியாவை உலக அரங்கில் மிளிரச்செய்த உத்தம தலைவர். தாய் நாட்டிற்காக திருமணமே செய்து கொள்ளாமல் நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக உழைத்த கர்ம வீரர் காமராஜருக்கு 40வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அக்டோபர் 2ம் தேதி பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் அமைதி பேரணி நடக்கவிருக்கிறது.இந்த பேரணி கட்சியின் மாநில பொருளாளர் புழல் ஏ.தர்மராஜ் தலைமையில் நடக்கிறது. காலை 9 மணிக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை அலுவலகத்திலிலிருந்து புறப்பட்டு அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சைதாப்பேட்டை வழியாக காமராஜரின் நினைவிடத்திற்கு அடைகிறது.