திருப்பதி பிரம்மோற்சவ 6ம் நாள்: அனுமந்த வாகனத்தில் சுவாமி வீதியுலா : மாலையில் தங்க தேரோட்டம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி வந்தார். மாலையில் தங்க ரத உற்சவம் நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் காலை, மாலையில் மலையப்ப சுவாமி பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 5ம் நாளான நேற்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் கருட சேவை உற்சவம் நடந்தது. தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி மகாவிஷ்ணு அலங்காரத்தில் நான்கு மாடவீதிகளில் பவனி வந்தார். அப்போது மூலவருக்கு அணிவிக்கப்படும் லட்சுமி ஆரம், மகரகண்டி ஆரம் அணிந்து மலையப்ப சுவாமி வலம் வந்தார். சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வழக்கமாக இரவு 8 மணியளவில் தொடங்கும் கருடசேவை உற்சவம் இந்த முறை விஐபிகள் தரிசனம் காரணமாக 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. 6வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதிகளில் பவனி வந்தார். யானை, குதிரை, காளைகள் அணிவகுத்து வந்தன. சுவாமியின் தசவதாரங்களை குறிக்கும் வேடங்களை அணிந்து பக்தர்கள் வீதி உலாவில் கலந்துகொண்டனர். இன்று மாலை 5 மணியளவில் தங்க ரத உற்சவம் நடக்கிறது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி 4 மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகனத்தில் சீனிவாச பெருமாளாக மலையப்ப சுவாமி நான்கு மாடவீதியில் பவனி வருகிறார். நாளை காலை சூரியபிரபை வாகனம், இரவு சந்திரபிரபை வாகன உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான மகாதேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.