ஆணையரை கண்டித்து துப்புரவு தொழிலாளர்கள் இன்று தர்ணா: பூந்தமல்லி நகராட்சியில் பரபரப்பு
பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி ஆணையருக்கு எதிராக துப்புரவு தொழிலாளர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை பூந்தமல்லி நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் 47 பேர் உள்ளனர். ஒப்பந்த தொழிலாளர்களாக 65 பேர் பணிபுரிந்து வருகின்றனர். துப்புரவு தொழிலாளர்களுக்கு தாட்கோவில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதனால் கடன் பெறுவதற்கும் கூட்டுறவு வங்கியில் உறுப்பினராக இணைத்துகொள்வதற்கும் சம்பள பணத்தில் இருந்து கடன் தொகை பிடித்துக்கொள்வதற்கும் ஆணையர் சுரேந்திர ஷா அனுமதி கடிதம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் துப்புரவு தொழிலாளர்களுக்கு கடன் எளிதாக கிடைக்கும். ஆனால், ஆணையர் கடிதம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இந்த கடிதம் கேட்டு ஏற்கனவே 2 முறை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதன்பிறகும் கடிதம் வழங்கவில்லை.
இந்தநிலையில் இன்று காலை 7 மணிக்கு நகராட்சி அலுவலகத்துக்கு வந்த துப்புரவு தொழிலாளர்கள் வேலையை புறக்கணித்து விட்டு நகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆணையருக்கு எதிராக கோஷம் போட்டனர். ஆணையர் சுரேந்திர ஷா, துப்புரவு ஆய்வாளர் சாமுவேல் ஆகியோர் வந்து தொழிலாளர்களை சமாதானப்படுத்தினர். கடிதம் வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து, துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் கைவிட்டனர். ஆர்ப்பாட்டத்தால் குப்பை அள்ளும் பணிகள் பாதிக்கப்பட்டது.இதுபற்றி தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ஆணை யர் கடிதம் கொடுத்தால்தான் வங்கியில் கடனுதவி கிடைக்கும். அரசின் உதவி தொகையையும் பெற முடியும். கடிதம் கேட்டு 2முறை ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டோம். இனிமேல் கடிதம் வழங்காவிட்டால் நகராட்சி அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருப்போம் என்றனர்.