வாஷிங்டன்:மலேசிய விமானத்தை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு தீவிரவாதிகள்தான் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், உக்ரைனில் நடக்கும் போரை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டுமென அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.உக்ரைன் நாட்டின் மேலே பறந்து சென்ற மலேசிய பயணிகள் விமானம், ஏவுகணை தாக்குதலில் வெடித்து சிதறியது. இதில் 298 பயணிகள் நடுவானில் உடல் சிதறி பலியாயினர். ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள ஹிராபோவ் என்ற பகுதியில் பல கி.மீ. சுற்றளவுக்கு விமானத்தின் பாகங்களும், பயணிகளின் உடல்களும் சிதறி கிடந்தன. விமானம் வெடித்து சிதறியது தொடர்பாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மீது உக்ரைனும், உக்ரைன் ராணுவத்தின் மீது பிரிவினைவாதிகளும் பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையே, விமானம் நொறுங்கி விழுந்த இடத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கைப்பற்றியுள்ளனர். அவை ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டு அவற்றில் பதிவான தகவல்கள் சேகரிக்கப்பட்டால்தான் விமானம் வெடித்து சிதறியதற்கான உண்மையான காரணம் தெரியவரும் என தகவல்கள் வெளியாகின. ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்தான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்பதற்கு ஆதாரமாக அவர்களின் உரையாடல்கள் பதிவாகியுள்ளதாக உக்ரைன் கூறியிருக்கிறது.
இந்நிலையில், விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. வாஷிங்டனில் நேற்று பத்திரிக்கையாளர்களிடையே அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியதாவது: விமானம் நொறுங்கியதில் பெரும்பாலோர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அமெரிக்க பயணிகளும் இதில் பலியாகியுள்ளனர். உக்ரைன் விவகாரத்தை வைத்துக் கொண்டு நாம் பரஸ்பரம் அரசியல் விளையாட்டை நிகழ்த்துவதற்கு இது நேரமல்ல. விமானத்தை வீழ்த்தியது ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள்தான் என்பதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. அவர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இருந்துதான் ஏவுகணை அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே, உக்ரைனில் உடனடியாக போரை நிறுத்தி, முழு விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. பயணிகள் விமானத்தின் மீது நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான தாக்குதல் இது என்று ஐ.நா. கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க தூதர் சமந்தா பாவெர் கூறுகையில், ‘ரஷ்யா ஆதரவு இல்லாமல் கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க முடியாது. ஏனெனில், அவர்கள் பயன்படுத்திய பக் ஏவுகணை வானில் 33 ஆயிரம் அடிக்கும் மேலாக பறக்கும் விமானங்களையும் வீழ்த்தக் கூடிய ரஷ்யாவின் தயாரிப்பு ஆகும். எனவே, உக்ரைனில் போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், பாவெரின் குற்றச்சாட்டை ரஷ்ய தூதர் சுர்கின் முழுமையாக மறுத்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் முழுமையான போர் நிறுத்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் 11 பேர் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் குழு முழுமையான சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது.