பிரான்ஸில் ரயில்கள் மோதல் 40 பேர் படுகாயம்
போர்டியக்ஸ்:பிரான்சில் அதிவேக ரயில் மீது மற்றொரு ரயில் வேகமாக மோதியதில் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.பிரான்ஸ் நாட்டின் தென்மேற்கு பகுதியில் பைரனிஸ் மலைத் தொடர் உள்ளது. இதன் அடிவாரத்தில் தார்பஸ் நகரம் உள்ளது. இங்கிருந்து தலைநகர் பாரீஸுக்கு 178 பயணிகளுடன் அதிவேக ரயில் நேற்று மாலை கிளம்பியது. டென்குயின் என்ற பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டு இந்த ரயில் மீண்டும் புறப்பட்டது. அப்போது பின்னால் 60 பயணிகளுடன் வந்த மற்றொரு ரயில், அதிவேக ரயில் மீது மோதியது.இந்த விபத்தில் 2 ரயில்களின் பெட்டிகளும் கடுமையாக சேதமடைந்தன. 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும் மீட்பு குழுவினரும் விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த 40 பயணிகளையும் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதித்தனர். லேசான காயம் அடைந்த பயணிகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து மீட்பு குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகளும் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.