தயாரிப்பாளர் புகார்: அனன்யா பதிலடி
சென்னை: அதிதி பட தயாரிப்பாளர் தன் மீது சொன்ன புகாருக்கு பதிலளித்துள்ளார் அனன்யா.நாடோடிகள், எங்கேயும் எப்போதும் படங்களில் நடித்த அனன்யா, சமீபத்தில் நந்தா ஜோடியாக அதிதி படத்தில் நடித்தார். இப்படத்தை தயாரித்தவர் ராமகிருஷ்ணன். அவரது மகன் நிகேஷ் ராம் தயாரிப்பு பணிகளை கவனித்தபடி படத்தில் வில்லனாகவும் நடித்தார். அவர் கூறுகையில், அனன்யாவால் எங்கள் படக்குழுவுக்கு ரூ.50 லட்சம் நஷ்டமானது. ஒரு ஓட்டலில் தங்க வைத்தால் இன்னொரு ஓட்டலுக்கு மாறினார். தினமும் 11 மணிக்கு மேல்தான் ஷூட்டிங் வந்தார். உங்கள் படப்பிடிப்புக்காக கென்யா டூரை ரத்து செய்தேன். அதற்காக ரூ.2.5 லட்சம் கொடுக்க வேண்டும் என வாங்கிக் கொண்டார் என அடுத்துடுத்து குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதற்கு பதிலளித்து அனன்யா கூறியதாவது:அதிதி படம் என்னால் தாமதமானது என்கிறார்கள். இதை கேட்டால் சிரிப்புதான் வருகிறது. இந்த பட ஷூட்டிங் பலமுறை ரத்து ஆனது. அதற்கு நான் காரணம் கிடையாது. பலமுறை ஷூட்டிங்கிற்கு வந்து திரும்பி போயிருக்கிறேன். வடபழனியில் அவர்கள் புக் செய்த ஓட்டல் அறை எனக்கு ஒத்துவரவில்லை. அதற்காக அண்ணாசாலையில் உள்ள ஓட்டலில் அறை கேட்டது உண்மைதான். ஆனால் அதற்கான கூடுதல் செலவை நான்தான் பார்த்துக்கொண்டேன். ஜனவரி மாதம் எனது கணவருடன் கென்யாவுக்கு போக இருந்தேன். அப்போது ஷூட்டிங் இருப்பதாக திடீரென வந்து சொன்னார்கள். அங்கு ஓட்டல் அறை உள்பட டூர் வசதிகளுக்காக புக் செய்து பணமும் செட்டில் செய்துவிட்டோம். அது திரும்ப கிடைக்காது என்பதால்தான் பணம் கேட்டு வாங்கினேன்.