ஆப்கனில் ஏர்போர்ட் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
காபூல்:ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையம், ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமான நிலையத்தின் மீது இன்று காலை தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். விமான நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வரும் 2 கட்டிடங்களை ஆக்கிரமித்த தீவிரவாதிகள். அங்கிருந்தபடி சரமாரியாக ராக்கெட்களை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.இதில் விமான நிலையத்தின் கண்ணாடி சுவர்கள் வெடித்து சிதறின. ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருந்த நேட்டோ விமானங்கள் உட்பட பல்வேறு விமானங்கள் மீது ராக்கெட் குண்டுகள் பட்டு சேதம் ஏற்பட்டது.தீவிரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து, அந்த கட்டிடங்களை ஆப்கான் ராணுவத்தினரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினரும் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்தத் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று ஆப்கான் ராணுவ ஜெனரல் அப்சல் அமான் கூறினார்.