மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் பருவமழை தொடங்கும் முன்பாக 2 நாட்களாக பயங்கர சூறாவளி வீசியது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் மணிலாவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், நகரமே இருளில் மூழ்கி முடங்கியது. வடக்கு பசிபிக் கடலோர பிராந்தியத்தில் ஆண்டுதோறும் பருவகாலத்தில் பயங்கர சூறாவளி வீசும். இதில், பெரும்பாலும் பிலிப்பைன்ஸ் நாடு பாதிக்கப்படும். இந்த ஆண்டு பருவமழை தொடங்கும் நிலையில், கடந்த 2 நாட்களாக பிலிப்பைன்சில் பயங்கர சூறாவளி வீசியது. கிழக்கு பிலிப்பைன்சில் தோன்றிய சூறாவளி புயல், தலைநகர் மணிலாவுக்கு தெற்கே உள்ள லுசான் தீவை கடந்து மேற்கு நோக்கி சென்றது.
இதில் லுசான், மணிலா மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல கட்டிடங்கள் இடிந்தன. மின்கம்பங்களும், விளம்பரப் பலகைகளும் சரிந்து விழுந்தன. இதனால், மணிலாவின் பல்வேறு பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியது. அதே போல், பதான்காஸ் நகரில் சூறாவளி புயலால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் பேர் பலியானார்கள். கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கிழக்கே உள்ள அல்பே நகரில் பாதுகாப்பான இடங்களுக்கு தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர் என்று பிலிப்பைன்ஸ் தேசிய செஞ்சிலுவை சங்க தலைவர் ரிச்சர்டு கோர்டான் கூறினார்.
அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை குழு தலைவர் அலெக்சாண்டர் பாமா கூறுகையில், மரங்கள் விழுந்ததிலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியும் இது வரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது’ என்றார். லுசான் தீவில் தென்கிழக்கே உள்ள 4 பிராந்தியங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் ஏராளமான மக்கள் தற்காலிகமாக மணிலாவின் புறநகர் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்