தங்க பிஸ்கட் டப்பா ஏர்போர்ட்டில் சிக்கியது : வாலிபர் கைது
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, சார்ஜா போன்ற வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மதியம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஏர் இண்டியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளின் ஆவணங்கள் மற்றும் உடமைகளை இமிகிரேசன் மற்றும் வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஸ்கேனரில் நடத்தப்பட்ட சோதனையின் போது வாலிபர் ஒருவர் கொண்டு வந்திருந்த பையில் இருந்து பீப் சத்தம் கேட்டது. இதையடுத்து அந்த பையில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது ஸ்குரு டிரைவர் வைக்கும் டப்பாவில் 148 கிராம் எடை கொண்ட 2 தங்க பிஸ்கெட் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு ரூ.4.2 லட்சம். தங்கத்தை கடத்தி வந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பாக்கியராஜ் (35) என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிங்கப்பூர் விமான நிலையத்தில் டப்பாவை ஒப்படைத்த ஒருவர், திருச்சி விமான நிலையத்தில் காத்திருக்கும் ஒருவரிடம் ஒப்படைக்க கூறியதாக கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.